For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எகிப்தில் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

By Siva
Google Oneindia Tamil News

கெய்ரா: எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில் நேற்று அங்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இன்றும் 2வது நாளாக வாக்குப்பதிவு நடக்கிறது.

30 ஆண்டு காலம் எகிப்து நாட்டை ஆண்டு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து அவர் பதவி விலகினார். இந்த மக்கள் போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது.

முபாரக் பதவியை விட்டு வெளியேறியதும் இடைக்கால அரசு எதையும் அமைக்காத ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து நாடு முழுவதும் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அறிவித்தது ராணுவம். ஆனாலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்பது தெரியவில்லை.

இதனால், ராணுவத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதலில் ராணுவம் பதவி விலகிவிட்டு, இடைக்கால அரசை அமைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

ஆனால், இதை ராணுவம் ஏற்க மறுத்து போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. மக்களை சமாதானப்படுத்தும் வகையில் 78 வயதான கமால் அல் கன்சூரியை இடைக்கால பிரதமராகவும் ராணுவம் நியமித்தது. இதையும் மக்கள் ஏற்கவில்லை.

முன்னாள் சர்வதேச அணு சக்திக் கமிஷனின் தலைவரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது எல்பராடி தலைமையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவின் தக்ரீர் மைதானத்தில் குழுமியுள்ளனர்.

இந் நிலையில் ராணுவத்தினருக்கும் ஜனநாயக உரிமை கோரும் அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று எகிப்தில் 20 ஆண்டு காலம் கழித்து தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் பேரார்வத்துடன் வாக்களித்தனர். சில இடங்களில் 2 கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர்.

தக்ரீர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மட்டும் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.

இன்று இரண்டாவது நாளாக வாக்குப்பதிவு தொடர்கிறது. தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பெருநகரங்களில் இன்று அதிகபட்ச வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Egypt has gone for elections for the first time after 20 years. The first day of the polling went peacefully in most of the places. The polling is continuing today for the second day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X