For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ. 127.40 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் – ஜெ. உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருப்பூர் சாயப்பட்டரை பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு ஏற்படும் வகையில் 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 127 கோடியே 40 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-​

திருப்பூர் பகுதியிலுள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மற்றும் 20 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவு நீர், நொய்யல் ஆற்று வழியாக சென்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓரத்துப்பாளையம் அணையில் பாசன நீருடன் கலந்து, அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மாசு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க 1998 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னரும், வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டதால், 2003 ஆம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசனதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது.

சாயப்பட்டரைகள் மூடல்

இதனையடுத்து பல ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி திருப்பூரில் உள்ள சாய மற்றும் சலவை பட்டறைகள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை சாய மற்றும் சலவை பட்டறை உரிமையாளர்கள் அமல் படுத்தாத காரணத்தினால் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, 28.1.2011 நாளிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் பகுதியில் உள்ள சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், திருப்பூர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப்போனது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கழிவுநீர் வெளியேற்றல் பூஜ்ஜிய நிலையை அடைந்தால் ஜவுளித் தொழில் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும் என்பதால், ஆட்சியில் பொறுப்பேற்ற நான்கு நாட்களிலேயே இப் பிரச்சினைக்கு ஒரு சுமுக முடிவு காணும் வகையில் மே மாதம் 19ஆம் தேதியே அனைத்து தரப்பினரையும் அழைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள்.

இதன் பின்னர், அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் 28.7.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அருள்புரத்தில் நிறுவனத்தால் கையாளப்படும் சோதனை முறை அல்லது குஜராத் பாருச் என்னுமிடத்தில் கையாளப்படும் நானோ தொழில் நுட்பம் முறை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்யநிலையை எட்டவேண்டும் எனவும், இதற்கான நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தவும், அதற்கான உபகரணங்களை வாங்குவதற்காகவும், ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும், 10 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால் மொத்தத்தில் 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.

127 கோடி ரூபாய் வட்டியில்லா கடன்

இதன் அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய சுத்திகரிப்பிற்கான கருவிகளை நிறுவிட, திருப்பூரிலுள்ள ஆண்டிப்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய், அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், சின்னக்கரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், எஸ்டர்ன் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10 கோடி ரூபாய், கள்ளிக்காடு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 7 கோடியே 96 லட்சம் ரூபாய், கரைப்புதூர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 10 லட்சம் ரூபாய், மங்கலம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 55 லட்சம் ரூபாய், மண்ணரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 9 கோடியே 32 லட்சம் ரூபாய், பார்க் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு 6 கோடியே 73 லட்சம் ரூபாய், என திருப்பூரை சுற்றியுள்ள மொத்தம் 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 127 கோடியே 40 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகளினால் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு பூஜ்ய நிலையை எட்டுவதற்கு வழி ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu Government has sanctioned an interest free loan Rs 127.40 crore to upgrade the 15 Common Effluent Treatment Plants in Tirupur, according to an official press release. The move is a significant development for the knitwear industry in Tirupur, where over 754 units including dyeing units were shut down in February this year following an order of the Madras High Court due to pollution concerns and failing to achieve zero liquid discharge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X