For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் 63.5% மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்க சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாட்டின் 63.5 சதவீத மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு, இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இந்தக் கனவுத் திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதா அமலுக்கு வந்தால், நாட்டில் உள்ள மொத்த மக்களில் 63.5 சதவீதத்தினர் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவர். இவர்களில் கிராமப் புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப் புறங்களில் 46 சதவீதம் பேரும் பயனடைவர்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்படும். குடும்பத்தில் மூத்த பெண்மணியின் பெயரில் ரேஷன் கார்டு வழங்கப்படும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க முடியவிட்டால் அதற்குரிய தொகை பணமாக வழங்கப்படும்.

இந்தச் சட்டத்தால் மத்திய அரசின் உணவு மானிய செலவு ரூ. 1.2 லட்சம் கோடியாக அதிகரிக்கும். கடந்த நிதியாண்டில் உணவு தானியங்களுக்கு மத்திய அரசு அளித்த மானியம் ரூ. 63,000 கோடியாகும்.

ரேசன் கடைகள் மூலம் நாடு முழுவதும் இப்போது 5.5 கோடி டன் உணவு தானியம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும்போது உணவு தானியங்களின் தேவையும் இது 6.1 கோடி டன்னாக அதிகரிக்கும்.

இந்த சட்டத்தின் கீழ் பயனடைவோர் முன்னுரிமை பிரிவினர், பொதுப் பிரிவினர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர். தற்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ரேசன் கார்டு வைத்திருப்போர் முன்னுரிமைப் பிரிவில் இடம் பெறுவர். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் பொதுப் பிரிவில் இடம் பெறுவர்.

இந்த புதிய சட்டத்தின்படி முன்னுரிமைப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு நபருக்கு மாதத்துக்கு 7 கிலோ உணவு தானியம் (அரிசி அல்லது கோதுமை), பொதுப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 3 கிலோ உணவு தானியமும் உறுதியாக வழங்கப்படும்.

இத் திட்டத்தில் அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும், பருப்பு வகைகள் 1 ரூபாய்க்கும் வினியோகம் செய்யப்படும்.

பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதம் விலை குறைவாக, குறைந்தபட்சம் மூன்று கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.

முதற்கட்டமாக உணவு மானியத்துக்காக ஆண்டுக்கு ரூ.27,663 கோடியை கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க விவசாயத் துறையில் ரூ.1,10,600 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.25 கோடி கர்ப்பிணிகள் பயனடைவார்கள்.

இதேபோல் இந்த சட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த, 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச் சத்து உணவு வழங்கப்படும்.

வீடற்றோர், ஆதரவற்றோர், வறுமையில் வாடுவோர், இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கும் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவுள்ளன. அவர்களுக்கு இலவச உணவு அல்லது குறைந்த விலையில் உணவு வழங்கப்படும்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (National Rural Employment Guarantee Scheme) தான், இந்த ஆட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தது. அதே போல இந்த உணவுப் பாதுகாப்பு சட்டமும் மத்திய அரசுக்கு ஓட்டு வாங்கவும் பெருமளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Union Cabinet has approved the Food Security Bill on Sunday. According to this bill, over 60% of India's population will be guaranteed the right to food. The bill is likely to be tabled in Parliament this week. The bill is a pet project of UPA chairman Sonia Gandhi, which will give Rs 63,000 crore of extra food subsidies. The bill would ensure food security to 63.5% Indians. It aims to cover 75% of the total rural population. Of this, 46% would qualify as ‘priority’ households.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X