For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் படுகொலைக்கு உதவிவிட்டு இப்போது பள்ளிக்கூடம் கட்டுகிறார்களாம்-மத்திய அரசு வைகோ தாக்கு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, சிங்கள விமானப்படை குண்டுவீச்சாலும், பீரங்கி தாக்குதலாலும் கொல்லப்பட்டனர்.

சிங்கள அரசு செய்த கொலை பாதகக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டதற்கு ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் எடுத்த முயற்சியை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தோற்கடித்து, சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க உதவியாகச் செயல்பட்டன.

இலங்கையில் போரின்போது சிங்கள ராணுவம் நடத்திய குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அறிந்து ஆய்வு செய்து அறிக்கை தர, மார்சுகி தாரிஸ்மன், யாஸ்மின் சுகா, ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.

அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ராஜபக்சே அரசு, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, essons Learned and Reconciliation Council-LLRC என்ற ஒரு கமிஷனை தானே அறிவித்துக் கொண்டது.

முழுக்க முழுக்க பொய்களைக் கொண்ட 388 பக்கங்கள் கொண்ட அந்தக் கமிசன் அறிக்கையை, கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டது. குறிப்பாக, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, ஆதாரங்களோடு வெளியிட்ட, சிங்கள ராணுவத்தின் இனக்கொலைக் குற்றங்களை, சிங்கள அரசின் கமிசன் மூடி மறைத்து விட்டது.

சிங்கள ராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தாக்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அதை மறுக்க வழியின்றி, விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளது. ஈழத்தமிழ் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதையும், இசைப்பிரியா எனும் தமிழ் நங்கை, ராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதையும், இத்தகைய பல்வேறு சம்பவங்களைப் பற்றி, ஒரு வரி கூட அந்த அறிக்கையில் இல்லை.

எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில், சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. ராணுவ சிப்பாய்கள் உடன் இருந்து மிரட்டிய நிலையிலேயே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

திட்டமிட்டே இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, உலகின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், தானே மோசடியாக கமிசனை நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி, அறிக்கையும் தந்து விட்டது.

உலகின் பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், இந்த அறிக்கையைக் கண்டித்துள்ளன.

எனவே, சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக் குற்றத்தை, முழுமையாக உலக அரங்குக்குத் தெரியப்படுத்தவும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ராஜபக்சே அரசை நிறுத்தித் தண்டிக்கவும், ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரமான விசாரணை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மூவர் குழு, ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

இந்திய அரசுதான் போரை நடத்த உதவியது என்றும், இயக்கியது என்றும், அதனால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றும், சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அமைச்சர்களும் இலங்கை நாடாளுமன்றத்திலேயே கூறினர். ஈழத்தமிழ் இனக்கொலையின் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.

2009 மே மாதத்துக்குப் பின்னரும், தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளிலேயே சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழர் தாயகத்தில், சிங்கள ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, கற்பழிப்பது போன்ற அக்கிரமங்களில் சிங்கள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களிலும் சிங்கள ராணுவம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது. பௌத்த விகாரைகளைத் தமிழர் பகுதிகளில் அமைக்கிறது.

உண்மைகளை வெளியே சொல்ல, ஈழத்தமிழர்கள் அஞ்சுகின்ற அபாயத்தில் உள்ளனர். உலக நாடுகள், சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை அறிந்து வருவதாலும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்பதாலும், இந்திய அரசு திட்டமிட்டு, சிங்கள அரசுக்கு உதவுகின்ற வேலையில் தற்போது ஈடுபட்டு உள்ளது.

2006ம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள், சிங்கள விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்டிக்காத இந்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது.

தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும், சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும், சிங்களவர்களுக்கு அடங்கித்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்ட ராஜபக்சேவிடம், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிரூஷ்ணா இப்போது பேசி விட்டதாகவும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது, தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றுவதற்காக, இந்திய அரசு செய்கின்ற பித்தலாட்ட வேலை ஆகும்.

தமிழக மீனவர்கள் மீது இனி சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தாது, என்று தன்னிடம் சிங்கள அரசு உறுதி அளித்ததாக கூறிய இந்திய அமைச்சர் கிருஷ்ணா முகத்தில் சிங்கள அரசு மூன்று நாட்களுக்குள் கரியைப் பூசிவிட்டது. நேற்றும், ராமேஸ்வரம் அருகில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது.

சிங்கள அரசும், இந்திய அரசும் செய்கின்ற மாய்மால வேலைகளை முறியடித்து, ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு ஆகும் என்பதை நிலைநாட்டவும், ஈழத்தமிழர்கள் மத்தியில் அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதி பூண வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

English summary
MDMK leader Vaiko today criticised the Congress led UPA Government of cheating Tamils over Sri Lankan issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X