For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் சென்ற ஆம்னி பஸ்சில் தீ-30 பயணிகள் தப்பினர்-சென்னை தம்பதியின் 70 பவுன் நகைகளும் தப்பின!

Google Oneindia Tamil News

வேலூர்: சென்னையிலிருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த டிரைவர்கள் உள்பட 30 பேரும் உயிர் தப்பினர். சென்னை தம்பதியினர் தங்களது மகன் கல்யாணத்திற்காக கொண்டு சென்ற ரூ. 80,000 மதிப்புள்ள துணிகள் எரிந்து போயின. ஆனால் அவர்கள் கொண்டு சென்ற 70 பவுன் நகைகளும் பத்திரமாக தப்பியதால் அவர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

சமீப காலமாக ஆம்னி பேருந்துகள் ஆங்காங்கே தீவிபத்துக்குள்ளாகும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே நடந்த கோர விபத்தில் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரோடு கருகிப் பிணமானார்கள். இந்த நிலையில், நேற்று பட்டப் பகலில் வேலூர் அருகே ஒரு ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

சென்னையிலிருந்து நேற்று காலை ஒரு ஏசி ஆம்னி பேருந்து பெங்களூர் கிளம்பியது. அதை முகம்மது ரபீக் என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக அஸ்லம், கிளீனராக ரியாஸ் ஆகியோர் செயல்பட்டனர். 27 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.

பிற்பகல் 2 மணியைத் தாண்டி ஆம்பூர் அருகே பேருந்து போய்க் கொண்டிருந்தபோது திடீரென பி்ன்னாலிருந்து புகை வந்துள்ளது. இதை பேருந்தின் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பார்த்து விட்டனர். உடனடியாக ஹாரன் அடித்தபடி பேருந்தின் டிரைவரை உஷார்படுத்தி புகை வருவதை தெரியப்படுத்தினர். இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது.

பயணிகளும் பின் சீட் பகுதியிலிருந்து புகை வருவதைப் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தனர். அதற்குள் தீ குப்பென பிடித்துப் பற்றி எரிய ஆரம்பித்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்தபடி வெளியேறத் தொடங்கினர். சிலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

சில விநாடிகள் பேருந்து முழுமையாக எரியத் தொடங்கியது. நடு ரோட்டில் பேருந்து எரிய ஆரம்பித்ததால் அப்பகுதியில் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. ஆம்பூரிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது தண்ணீர் தீர்ந்து விட்டது. இதையடுத்து வாணியம்பாடிக்குத் தகவல் போனது. ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து எலும்புக்கூடாகி விட்டது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். அவர்களின் பெரும்பாலான உடமைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. இருப்பினும் சில சூட்கேஸ்கள், அதில் இருந்த துணிமணிகள் எரிந்து போய் விட்டன.

பேருந்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது மகன் கல்யாணத்துக்காக நகை, துணிகளுடன் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ. 80,000 மதிப்புள்ள துணிகள் முழுமையாக எரிந்து போய் விட்டன. இருப்பினும் தங்களுக்கு அருகே பையில் வைத்திருந்த 70 பவுன் நகைகள் தப்பின. இதனால் அவர்கள் பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

விபத்து பகலில் நடந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுவே இரவு நேரமாக இருந்திருந்தால் பலர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார்கள், பெரும் விபரீதமாகியிருக்கும்.

ஏசி பேருந்து என்பதால் குளிர்சாதனப்பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

English summary
An Omni bus was caught fire near Ambur. All the 30 passengers including 3 crew were escaped unhurt. The bus was totally burnt. The bus was going to Bangalore from Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X