For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது போலி என்கவுன்டர் - யாரையோ திருப்திப்படுத்த நடந்தது: உண்மை அறியும் குழுவின் அறிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

பிப்ரவரி 26, 27 தேதிகளில், சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் குறித்து ஆய்வு செய்த அ மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, இந்த என்கவுன்டர் போலியானது என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அ. மார்க்ஸ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:

வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1.பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
2.பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் (PEM), திண்டிவனம்.
3.கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
4.வழக்கறிஞர் ரஜனி (PUHR), மதுரை.
5.வழக்கறிஞர் சுப.. மனோகரன், சென்னை
6.மதுமிதா தத்தா, அமைதிக்கான மற்றும் நீதிக்கான பிரச்சார குழு (CPG), சென்னை.
7.சங்கர ராம சுப்பிரமணியன், பத்திரிகையாளர், சென்னை.
8.வழக்கறிஞர் சையது அப்துல் காதர், மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO),.
9.நிர்மலா கொற்றவை, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கான அமைப்பு (MASES),.
10.சந்திரா, எழுத்தாளர், சென்னை.

நாங்கள் பிப்ரவரி 26, 27 தேதிகளில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சுற்றியுள்ள பொதுமக்கள், காவல்துறை ஆணையர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி பாலாஜி ஆகியோரை சந்தித்தோம். அருகிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும், ஆணையர் திரிபாதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கும் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது.

அவை:

பத்துமணிக்கே வந்துவிட்ட போலீஸ்...

1. நாங்கள் சந்தித்த மக்கள் சுமார் 10 அல்லது 10.30 மணியளவிலேயே காவல்துறையினர் அங்கு வந்தனர் எனக் கூறினர். தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும் காவல்துறையினர் கதவுகளையும், சன்னல்களையும் சாத்தி விளக்கை அணைக்குமாறு எச்சரித்ததாகவும் பலரும் கூறினர்.

காவல்துறை ஆணையர் என்கவுன்டர்களுக்குப் பின் பத்திரிகைகளுக்கு அளித்த செய்தியில் இரவு 12.30 மணியளவிலேயே கொள்ளையர்கள் ஒளிந்திருக்கும் தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னரே அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த முரண் குறித்து நாங்கள் ஆணையர் திரிபாதி அவர்களிடம் கேட்ட போது மேஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ள நிலையில் தான் பதில் கூற இயலாது எனக் கூறினார். வேறு பல கேள்விகளுக்கு எங்களிடம் விளக்கமாகப் பேசிய ஆணையர் இதற்கு மட்டும் மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொல்லியது அவரிடம் இதற்குப் பதில் இல்லை என்பதையே காட்டியது.

போலீஸ் சொன்ன கதை...

2. சன்னல் வழியாக ஒளிந்திருந்தவர்கள் சுட்டதாகவும், தாங்கள் தற்காப்பிற்காக சுட்டதாகவும் ஆணையர் சொன்னதைப் பத்திரிகைகள் பல கதை என்றே எழுதின. இதற்கு ஆதாரமாகப் பத்திரிகைகள் இரு காரணங்களைச் சுட்டிக்காட்டின. ஒன்று: இருதரப்பிற்கும் பெரிய அளவு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான வெடிச் சத்தங்களை யாரும் கேட்கவில்லை. இரண்டு: சன்னலிலோ, சன்னல் கம்பிகளிலோ குண்டுக் காயங்கள் எதுவும் கிடையாது.

குண்டுகள் பாய்ந்த மட்டத்திலேயே இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றிலும் குண்டுக் காயங்கள் இல்லை. சுவரிலும் இரண்டு குண்டுக் காயங்கள் மட்டுமே இருந்தன. இரத்தக்கறைகூட தரையில் மட்டுமே இருந்தது. நாங்கள் சந்தித்த மக்களும் சத்தங்கள் கேட்டதென்றாலும், நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த சத்தம் கேட்டதாக சொல்லவில்லை. வீட்டைப் பார்வையிட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எங்களால் சண்டை நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தைப் பார்க்க முடியவில்லை. இந்த அய்யங்கள் குறித்தும் ஆணையர் அவர்களிடம் பதில் இல்லை.

நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றவுடன் அந்த வீடு இருந்த சந்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொன்னார்கள். அருகில் சென்று சம்பவம் நடந்த வீட்டை வெளியில் இருந்து பார்க்கக்கூட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையெல்லாம்விட மோசமான விஷயம் என்னவெனில் பக்கம் மற்றும் எதிர் வீட்டிலுள்ள மக்களையும் சந்திக்க விடவில்லை. இப்படிச் சுற்றியுள்ள மக்களைக்கூட சந்திக்க விடாமல் தடுத்தது மர்மமாக உள்ளது. காவல்துறை எதையோ மறைக்க விரும்புவதையே இது காட்டுகிறது.

காவல்துறை இந்த என்கவுன்டர் கொலைகளைப் பற்றிச் சொல்லுகிற செய்தி எல்லாமே வழக்கமாக எல்லா என்கவுன்டர்களிலும் சொல்லுகிற கதையை ஒத்ததாகவே உள்ளது. ‘நாங்கள் சென்று அவர்களைச் சரணடையச் சொன்னோம். அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காக திருப்பிச் சுட்டோம். அவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே செத்துப் போனார்கள். எங்களில் இருவருக்கு மட்டும் லேசான காயம்’ என்கிற கதை நாம் வழக்கமாகக் கேட்பதுதான். இங்கும் காவல்துறை அதைத்தான் சொல்லுகிறது.

முற்றுகையை நீட்டித்து பிடித்திருக்கலாமே...

ஒளிந்திருந்தவர்கள் இருந்த வீடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட ஒற்றைப் படுக்கை அறை இல்லம். காவல்துறை சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் கூட கிட்டத்தட்ட ஒரு பொந்தில் அடைப்பட்ட எலிகளைப் போலத்தான் அவர்கள் ஐவரும் அங்கு அடைந்திருக்கின்றனர்.

காவல்துறை நினைத்திருந்தால் அவர்களை முற்றுகையிட்டு, தேவையானால் ஒரிரு நாட்கள் வரை முற்றுகையை நீடித்து அவர்கள் அனைவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம். அல்லது கமாண்டோ படையினரைக் கொண்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களில் ஒரு சிலரையாவது உயிருடன் பிடித்திருக்கலாம்.

அப்படி உயிருடன் பிடித்திருந்தால் விசாரணையில் மேலும் பல உண்மைகள் நமக்குத் தெரிய வந்திருக்கும்.

போலீஸ் முன்பே திட்டமிட்டுவிட்டது...

இங்கொன்றை எமது குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. என்கவுன்டர் நடப்பதற்கு முன்னதாகவே, இண்டாவது வங்கிக் கொள்ளை நடந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே கொள்ளை அடித்தது பீகாரைச் சேர்ந்த கும்பல்தான் என்று போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது (பிப்ரவரி 22).

இது எப்படி அவர்களுக்குத் தெரிய வந்தது எனில் இதேபோன்ற வங்கிக் கொள்ளைகளைப் பீகாரைச் சேர்ந்த கும்பல் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நடத்தியதாகவும், அந்தக் கொள்ளையர்களைப் பிடித்து விசாரித்ததில் சென்னையிலும் தங்கள் கைவரிசையை அவர்கள் காட்ட இருப்பதாகச் செய்தி கிடைத்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சுபோத் காந்த் சிங் எனகிற நபர் சில தகவல்களைக் கூறியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். திங்கட்கிழமைகளாகப் பார்த்துக் கொள்ளையடிப்பது, சி.சி.டிவி கண்காணிப்பு இல்லாத அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைத் தேர்தெடுப்பது, பொம்மைத் துப்பாக்கிகளை வைத்து மிரட்டுவது ஆகியன இந்த கும்பலின் கொள்ளையடிக்கும் முறை (modus operandi) எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

யாரையோ திருப்திப்படுத்த நடந்த என்கவுன்டர்

இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கத்தக்கன.

ஒன்று: இந்த உண்மை தெரிந்ததன் விளைவாகவே தமிழக காவல்துறை பீகாரைச் சேர்ந்த கும்பலுடன் இக்கொள்ளையைத் தொடர்புப்படுத்தி விரைவாகத் துப்புத் துலக்க முடிந்தது.

இரண்டு: தமிழகக் காவல்துறையைப் போல சந்தேகப்பட்டவர்களை என்கவுன்டரில் போட்டுத் தீர்க்காமல் மகாராஷ்டிர காவல்துறை முறையாகக் கைது செய்து விசாரித்ததாலேயே இந்த உண்மை இன்று பயன்பட்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்தவோ அல்லது ஒரு அதிரடி சாதனைச் செய்து தமிழகத்தை இன்று பாதித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைத் திருப்பவோ செய்த இந்த என்கவுன்டர் படுகொலைகளால் இன்று தமிழக காவல்துறை பல அரிய உண்மைகளை இழந்துள்ளது.

ஆணையரின் கூற்றுக்களைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது. 22 இரவு அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற போது ஒளிந்திருந்தவர்கள் உண்மையிலேயே அந்தக் கொள்ளைகளைச் செய்தவர்கள்தானா என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை. அன்று அவர்கள் வெளியிட்ட படத்தில் உள்ள ஒருவர் அந்த வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே அன்று இரவில் அங்கு சென்றதாக ஆணையர் எங்களிடம் கூறினார். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் சென்றவர்கள் அங்கிருந்த ஐவரையும் கொன்றதற்குச் சொல்கிற ஒரே காரணம் ‘அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காகக் கொன்றோம்’ என்பதுதான். ஞ

இது ஏற்கத்தக்கது அல்ல. பொம்மைத் துப்பாக்கி வைத்துதான் வங்கிக் கொள்ளை அடித்ததாக முதல் நாள் ஆணையர் கூறியுள்ளார். கொள்ளயர்கள் வைத்திருந்ததாக இப்போது காட்டப்படும் துப்பாக்கிகள்கூட நாட்டுத் துப்பாக்கிகள்தான். இந்நிலையில், அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்களைத் தேவையானால் வெளியேற்றிவிட்டு, ஒளிந்திருந்தவர்களை உயிருடன் பிடிக்கும் அளவுக்குத் திறமையுள்ளதுதான் நமது காவல்துறை. அதற்கான முயற்சியில் எள்ளளவும் இறங்காமல், அத்தனை பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன் காவல்படை சென்றுள்ளது என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம்.

காவல்துறையினர் கைது செய்யச் செல்லும் போது கைதாக வேண்டியவர்கள் வர மறுத்தால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமுண்டு. (பிரிவு 46). இந்த வன்முறை கொலை என்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டத்தில் அனுமதியுண்டு.

ஆனால், கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவிற்கு உரிய குற்றத்தைச் செய்தால் மட்டுமே அவரைக் கொல்லலாம் (46 3 ). அன்று கொல்லப்பட்டவர்களைப் பொருத்தமட்டில் இன்று காவல்துறை என்னென்ன கூடுதல் தகவல்களைத் தந்த போதும், அன்றைய அளவில் அவர்கள் வெறும் சந்தேகத்திற்குரிய நபர்களே. அவர்கள் கொலைக் குற்றம் செய்தவர்களும் அல்ல. அவர்கள் ஐவரையும் அன்று கொன்று குவித்தது சட்ட ரீதியில் ஏற்புடையதல்ல. இதுகுறித்து ஆணையரை நாங்கள் கேட்ட போது அவர் சற்றுக் கோபமடைந்தார். எங்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது எங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லாவிதமான உரிமைகளும் எங்களுக்கு உண்டு என்று கூறினார்.

உண்மைதான். ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள கொலையும் செய்யலாம். காவல்துறைக்கு மட்டுமல்ல எல்லா குடிமக்களுக்குமே இந்த உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு கொலை நிகழும்போது அது கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட வேண்டும்.

கொலையைச் செய்தவர் நீதிமன்றத்தில் இந்திய சாட்சியச் சட்டத்தின் 105ம் பிரிவின்படி, தான் தற்காப்பிற்காகவே இந்தக் கொலை செய்ய நேர்ந்தது, வேறு வழியே இல்லை என நிறுவும் பட்சத்திலேயே வழக்கில் இருந்து அவர் விடுதலை பெறலாம். இதுவும் குடிமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் பொருந்தும். இதை நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜுவும், சி.கே.பிரசாத்தும் போலி என்கவுன்டர் கொலைகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை நாங்கள் ஏற்பதில்லை. உச்சபட்ச தண்டனை என்ற அளவிலேயே இந்த கருத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

எமது பார்வைகளும், கோரிக்கைகளும்:

1. சந்தேகத்திற்குரிய ஐவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம், பிடித்திருக்க வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். சந்தேகத்திற்குரிய ஐவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது அற மற்றும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமல்ல புலனாய்வு நோக்கிலும் தவறானது. கொள்ளைக் கும்பலின் வீச்சு, தீவிரவாதத் தொடர்பு எனப் பல உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பு இவர்கள் கொல்லப்பட்டதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக்க் கண்டிக்கிறோம். இதில் பங்கு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. இது ஒரு போலி என்கவுன்டர் என்பதற்கான நியாயமான அய்யங்கள் உள்ளன. ஆணையர் திரிபாதி அவர்களால் இவை குறித்துத் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் கூறியுள்ள காரணங்கள் தவிர வேறு சில அய்யங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஒருவர் ஷூ கால்களுடன் கிடந்த படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. அறைக்குள் இருந்தவர் ஷூ அணிந்திருக்க வாய்ப்பில்லை.

கொள்ளைச் சம்பவங்கள் குறித்த எந்தத் தகவல்களையும் வெளியில் சொல்லக்கூடாது என வங்கி ஊழியர்கள் மிரட்டப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. பெருங்குடி பரோடா வங்கி அதிகாரி திரு பாலாஜி எங்கள் குழுவினர் சென்றபோது ஏதும் பதில் கூற மறுத்துவிட்டார். பேசியவற்றையும் வெளியிடக்கூடாது என வேண்டிக்கொண்டார். இப்படி தகவல்களைத் வெளியே வராமல் தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுபோன்ற அய்யங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏற்புடையதல்ல.

தமிழக அரசின் கீழுள்ள காவல்துறைப் பிரிவொன்றின் விசாரணை மூலம் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ. புலனாய்வு தேவை. நடந்துள்ள என்கவுன்டரில் ஐந்து இளைஞர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செயலின் கடுமை கருதி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபததொருவர் தலைமையில் நீதி விசாரணை தேவை.

3. தேசிய மனித உரிமை ஆணைய நெறிமுறைகளின் படி ஆணையர் திரிபாதி, இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன், கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட என்கவுன்டர் குழு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.

4. 2007 ஆகஸ்ட் 8ல் வெளியிடப்பட்ட தமிழக அரசின் என்கவுன்டர் தொடர்பான நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலைகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்புக் குற்றச்சாட்டுகள் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன்படி இப்போது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்பில் ஏதாவது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலோ அல்லது பீகார் அரசுத் தரப்பில் அய்யங்கள் எழுப்பப்பட்டாலோ அது உரிய முறையில் கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

5. மேற்கூறிய நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலையில் பங்குப் பெற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, ஊக்கப் பதவி உயர்வுகளோ அளிக்கப்படக் கூடாது. இங்கும் அது கடைபிடிக்கப்பட வேண்டும்.

6. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்துக் கொண்டு இன்று தமிழகமெங்கிலும் உள்ள இரண்டு லட்சங்களுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் (migrant labourers) மற்றும் மாணவர்கள் குற்றப்பரம்பரையினர் போல் நடத்தபடுவதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய திருப்பூரில் சென்ற வாரத்தில் இத்தகைய தொழிலாளிகள் எல்லோரும் காவல்நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வேளச்சேரி பகுதியிலும்கூட சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டு ஆங்காங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள் என அறிகிறோம். வங்கிக் கொள்ளை நடந்த பெருங்குடி முதாலான பகுதிகளில் வாழ்கிற. வடநாட்டார் போலத் தோற்றமளிக்கிற அனைவரும் இன அடிப்படையில் விசாரித்துப் பதிவு (racial profiling) செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளிலும் பிற இடங்களிலும் இவ்வாறு பட்டியல் எடுக்கப்படுவதை ஆணையரே பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

எவ்வகையான தொழில் மற்றும் சங்க உரிமைகளுமின்றி கடுமையாகச் சுரண்டப்படும் இவர்களைக் குற்றப்பரம்பரையினரைப் போல நடத்துவது வருந்தத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும் உலகமெங்கும் இவ்வாறு பணி செய்து கொண்டும், படித்துக் கொண்டும் உள்ளனர். உலகமயச் சூழலில் இத்ததைய புலம்பெயர்வுகள் அதிகமாகியுள்ள நிலையில் இத்தகைய நடைமுறை கண்டிக்கத்தக்கது.

7. ஊடகங்களும், சில அமைப்புகளும்கூட இவ்வாறு “வடநாட்டார்” மீது இனவெறுப்பு ஏற்படும் வகையில் எழுதவும் பேசவும் செய்கின்றனர். வடநாட்டைச் சேர்ந்தவர் என நினைத்து இன்று ஒரு ஆந்திர மாநிலத்தவரை மயக்கம் வரும் வரை அடித்துள்ள செய்தி படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் அவசியம். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.

8. வேளச்சேரியிலும் சென்னையின் வேறு சில பகுதிகளிலும் இந்த என்கவுன்டர் கொலைகளைப் பாராட்டி பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்கள் இவற்றில் தூக்கலாக ஒலிக்கின்றன. என்கவுன்டர் செய்த போலீசை வானளாவப் புகழ்வது ஒன்று. என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராகவும் அரசியல் சட்ட ஆட்சியை வற்புறுத்தியும் இயங்குகிற மனித உரிமை அமைப்பினரைக் கடுமையாக கண்டிப்பது அடுத்தது. காவல்துறையின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற அய்யம் ஏற்படுகிறது. . நேற்று இதுகுறித்து விசாரிக்க சம்பவம் நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் இத்துடன் இணைத்து நோக்கத்தக்கது.

நாங்கள் சம்பவம் நடந்த வீதிக்குள் நுழைய காவல் துறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் சுற்றியுள்ள மக்கள் எங்களுடன் எவ்விதத் தயக்கமுமின்றி உரையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் கேட்ட தகவல்களை அவர்களுக்குத் தெரிந்தவரை விளக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென அங்கு வந்த ஒரு சிலர் போலீசைப் புகழ்ந்து பேசியதோடு, எங்களை அவதூறாகப் பேசி அச்சுறுத்தித் தாக்க முயன்றனர். வெளியே போகாவிட்டால் விரட்டி அடிப்போம் என கிட்டத்தட்ட ஒரு தள்ளூமுள்ளூ நிலையே அங்கு ஏற்பட்டது. அங்கு காவலில் இருந்த போலீசார் எங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்ட போதிலும் கலாட்டா செய்தவர்களை அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியரசர் ராம சுப்பிரமணியன் அவர்கள் மனித உரிமை அமைப்புகளை ‘மூன்றாவது புலனாய்வு முகமை (third investigation agency)’ எனக் கூறி இத்தகையோர் மேற்கொள்ளும் உண்மை அறியும் பணிகளின் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் பல வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டியதோடு,, இத்தகைய பணிகளைத் தடை செய்ய முடியாது எனத் தீர்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைப் பாதுகாவலர்களைப் (Human Rights Defenders) பாதுகாக்கும் ஐ.நா. ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணிக்கு அரசு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஒரு சில வன்முறையாளர்களால் விரட்டப்பட்ட போது காவல்துறையினர் இதைக் கண்டுக் கொள்ளவில்லை. காவல்துறை தூண்டுதலே இதற்கு பின்னணியாக இருக்கலாம் என்கிற அய்யம் எங்களுக்கு உள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றை நாங்கள் ஆணையரிடம் அளித்துள்ளோம். இதன்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Human rights activists here have demanded for CBI probe into the alleged police encounter death of five bank robbery suspects, considering the "gravity of the situation," and said the incident has resulted in racial profiling of north Indian migrants and students. "There are apprehensions that this could be a fake encounter as no information is being revealed. Five persons have been killed and considering the gravity of the situation, a CBI probe should be ordered for," Prof A Marx, People''s Union for Human Rights (PUHR), said. Marx was part of a ''fact-finding team'' that visited the site of the encounter which took place on February 23 at Velachery and held some inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X