For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் போராட்டத்தை மைய்மாக வைத்து கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துகிறது மத்திய அரசு-பிஷப் சின்னப்பா

Google Oneindia Tamil News

Archbishop A.M. Chinnappa
சென்னை: கூடங்குளத்தில் நடந்து வருவது மக்களின் போராட்டம். அதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அது கிறிஸ்தவர்களின் போராட்டமும் அல்ல. ஆனால் இந்தப் பிரச்சினையை வைத்து சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை மத்திய அரசு இழிவுபடுத்துகிறது என்று கிறிஸ்தவப் பேராயர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக ஆயர் பரேவை தலைவரும், சென்னை மயிலை மறை மாவட்ட பேராயருமான சின்னப்பா, தூத்துக்குடி பேராயர் இவான் அம்புரோஸ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமும், தூத்துக்குடி மறைமாவட்ட பல்நோக்கு சமூக சேவை சங்கமும் சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுக்கு வரும் நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 32 கேள்விகள் அடங்கிய ஒரு விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்டிருந்தனர். நாங்கள் அதற்கு பதில் அனுப்பினோம். பின்னர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் கணக்கு காட்டினோம். அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் எப்.சி.ஆர்.ஏ. எண்ணை தடை செய்து, வங்கி கணக்கை முடக்கிவிட்டனர். தற்போது ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வங்கியில் முடங்கி கிடக்கிறது.

வங்கி கணக்கை முடக்கிய நடவடிக்கையால் ஆயர் பேரவை, பேரதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறுபான்மை கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும். தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடும்படி சி.பி.ஐ.யையும், தமிழக அரசையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்.

கூடங்குளம் அணுஉலை குறித்து உருவாகி உள்ள விவாதங்களையும், போராட்டங்களையும் மனதில் கொண்டுதான் மத்திய அரசு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கும், பிற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த அணுஉலை, கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அணுஉலை தங்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதால்தான் ஆட்சேபனை தெரிவித்து போராடி வருகிறார்கள்.

அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் 217 இந்து பெண்கள் அணுஉலை திட்டத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டி உள்ளூர் பிள்ளையார் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு திருச்சபை எவ்வித பொருளாதார உதவியும் செய்யவில்லை. எனவே, கிறிஸ்தவர்கள்தான் அணுஉலை திட்டத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக உள்ளனர் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி.

மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அந்த போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை அளிக்கிறோமே தவிர, போராட்டத்திற்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மின்சாரம் தேவை. அதற்கு நாங்கள் தடைபோடவில்லை.

அணுஉலை தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் தங்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். பயத்திலும், துன்பத்திலும் உள்ள மக்களுடைய உணர்வுகளை மதிப்பது திருச்சபையின் இயல்பு மற்றும் தார்மீக கடமை. அந்த வகையில்தான் போராட்டத்திற்கும், திருச்சபைக்கும் உள்ள தொடர்பே தவிர வேறு எவ்விதமான நிதி பரிவர்த்தனையோ இல்லை. மக்களின் பயத்தை போக்கி அணுலை திட்டம் குறித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அரசு முடிவு எடுக்குமானால் அதற்கு திருச்சபை குறுக்கே வராது.

இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

தடை செய்யப்பட்டு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமானது 90 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த அமைப்பு பொதுநலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று யாருமே குற்றம் சுமத்த முடியாது. ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் 2,100 ஆசிரியர்கள், 2 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டுள்ள 230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1,200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

அரசியலில் கிறிஸ்தவர்கள் மதசார்பற்ற கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தன்னுடைய முகத்தை காட்ட தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை மட்டும் மத்திய அரசு குறிவைத்து தாக்குவது ஏன்? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றனர்.

English summary
As the Centre launched crackdown on some NGOs for allegedly fuelling protests over Kudankulam Nuclear Power Plant, Christian leaders have said government should stop harassing the Christian minority and withdraw "negative injunctions". "We request the Prime Minister to stop harassing the Christian minority and withdraw negative injunctions issued in lieu of Tuticorin Diocese and grant appropriate relief," A M Chinnappa, Archbishop of Madras Mylapore and President of Tamil Nadu Bishops' Council said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X