For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரவும் பன்றிக் காய்ச்சல் - தப்புவது எப்படி? தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: குளிர் மற்றும் மழைக்காலத்தில் மட்டுமே தாக்கி வந்த ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் இப்போது கோடைக்காலத்திலும் பரவத் தொடங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்வைன் ப்ளூ

ஸ்வைன் ப்ளூ என்று அழைக்கக் கூடிய பன்றிக் காய்ச்சல் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் பரவியது. தமிழகத்திலும் இந்நோய் தாக்கியது. இந்நோய் குளிர் மற்றும் மழைக்காலத்தில் மட்டுமே பரவியது. இப்போது கோடைக்காலத்தில் பரவுவதால் மருத்துவ நிபுணர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவ ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தட்பவெட்ப

சூழ்நிலையில் இக்கிருமி உயிர் வாழ வாய்ப்பு இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கிருமிகளில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் கோடை காலத்தில் பன்றி காய்ச்சல் பரவுகிறது.

ஆலோசனைக் கூட்டம்

டெல்லியில் இந்திய பொது சுகாதார சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்திய மருத்துவ நிறுவனத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் பொது சுகாதா ரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ பங்கேற்றார். இதில் பன்றி காய்ச்சல் நோய் கிருமியின் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நோய் தடுப்பு மைய நிபுணர்கள், எச்-1, எப்-1 வைரஸ் நோய் உண்டாக்குகின்ற தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த நோய் பரவும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பரவுவது எப்படி?

தும்மல், இருமலினால் காற்றின் மூலம் பன்றி காய்ச்சல் பரவுகிறது. ஆனால் அமெரிக்காவில் 'டிஸ்யூ' பேப்பர் மூலமாகவும், கைகள் மூலமாகவும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மூக்கில் இருந்து ஒழுகும் நீரை அல்லது சளியை 'டிஸ்யூ' பேப்பரில் துடைத்து விட்டு கீழே போடுவதாலும் பஸ், ரெயில், லிப்ட் போன்ற இடங்களில் கைப்பிடிகளில் பிடித்து செல்வதாலும் பன்றி காய்ச்சல் பரவுகிறது.

தடுப்பது எப்படி?

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து மருத்துவர் இளங்கோ கூறியதாவது:

பன்றி காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல் இருக்கும். மூக்கில் இருந்தும் கண்ணில் இருந்தும் நீர் வடியும், உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும். தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவ மனைகளில் சென்று நோய் பாதித்தவர்களை பார்க்க போவதை தவிர்க்க வேண்டும்.

இந்நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும்.

மருத்துவமனை ஊழியர்கள், கவச உறைகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு இந்நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் பழக்கத்தை செயல்படுத்த வேண்டும். நோய் பாதித்தவர்களின் ஆடைகளை தனியாக வைத்து கொதிக்கும் நீரில் போட்டு துவைக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல், இருமல், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர்களை உடனே அணுக வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் இந்நோய் பற்றிய தகவல்களை அரசின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இலவச தொலைபேசி எண் வழங்கி தகவல் கொடுக்கலாம். பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தலாம் என்றார் அவர்.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்நிலையில் காங்கேயம் அருகே பன்றிக் காய்ச்சலுக்கு விவசாயி பலியாகி இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது என்பதை அறியும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கேயம் பகுதி முழுவதும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். தனியார்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யாருக்காவது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறி இருந்தால் உடனே சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 20 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உஷார்

தமிழ்நாட்டில் மொத்தம் 1,612 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. அனைத்து சுகாதார மையங்களை சேர்ந்த டாக்டர்களும் பன்றிக் காய்ச்சல் குறித்து உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் பற்றிய அறிகுறி காணப்பட்டால் உடனே சுகாதாரத்துறை துணை இயக்குனர்களை தொடர்பு கொள்ளும்படி அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் 'டாமி புளு' மாத்திரைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தேவையான அளவு வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார துறை ஊழியர்களும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் தலைமையில், பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்கான அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Amidst rumours of another pandemic of H1N1 ravaging the state, doctors in the city have categorically stated that they are more worried about the panic that this could generate, than handling an outbreak of the virus itself
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X