For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்திசாலித்தனத்தை நிரூபிக்க முயற்சிக்காதீங்க...: சசிகலாவிடம் நீதிபதி காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Sasikala
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கூடுதல் ஆவணங்களைக் கேட்டும் தராததால் உரிய பதிலளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வழக்கு தாமதமாவதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்த கருத்துக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனையா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீதான வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததுடன் தொடர்ந்தும் விசாரணையில் ஆஜராவதிலிருந்தும் விலக்குப் பெற்றுள்ளார்.

நீதிபதி மல்லிகார்ஜூனையா பலமுறை எச்சரித்தும்கூட அவ்வப்போது நீதிமன்ற விசாரணையை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கட் அடிப்பதும் நீதிபதி, ஒரு ஆசிரியரைப் போல் கடுமையாகக் கண்டிப்பதும் பெங்களூர் நீதிமன்றம் அவ்வப்போது கண்டுவரும் காட்சிகள்.

நீதிபதி மல்லிகார்ஜூனையா முன்பு நேற்றும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் சுதாகரன், இளவரசி ஆஜராகாததற்கு அவர்களது வழக்கறிஞர்கள் மூர்த்திராவ், அசோகனை ஆகியோரை நீதிபதி கடிந்தார்.

பின்னர் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் 41 கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய சசிகலா ஒரு கட்டத்தில் அதிரடியாகப் பேசத் தொடங்கினார்.

தாமதத்துக்கு நீதிமன்றமே காரணம்

சசிகலா தனது வாக்குமூலத்தின்போது, " எனக்குச் சொந்தமான நிறுவனங்களை விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு சோதனையிட்ட போது என் சார்பாக யாரும் அங்கு இருக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் சிலவற்றில் இடுகுறியிட்டுள்ளனர். மேலும், சிலவற்றில் இடுகுறியிடப்படவில்லை. இடுகுறியிடாத ஆவணங்களின் நகல்களை தரக் கோரியும், பார்வையிட அனுமதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இடுகுறியிடாத ஆவணங்கள் எனக்குச் சாதகமானதாக இருக்கலாம். அவற்றைப் பார்வையிடாதவரை வருவாய் பற்றி விளக்கமளிக்க இயலாது" என்று அதிரடியாகக் கூற நீதிமன்றத்தில் சூடு பறந்தது.

கடும் வாக்குவாதம்

நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் சசிகலா வாக்குமூலம் அளிப்பதை ஏற்க முடியாது என்று சிறப்பு மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். இது தொடர்பாக சசிகலா வழக்குரைஞர் மணிசங்கர் மற்றும் பி.வி.ஆச்சார்யாவுக்கு இடையே கடும் வாக்குவாதம் நீடித்தது.

வாக்குமூலங்களை அனைவருக்கும் கேட்கும் வகையில் சப்தமாகக் கூற வேண்டும் என்று சசிகலாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்தும் என் அரசியல் எதிரி கருணாநிதியின் கட்சியைச் சேர்ந்த அன்பழகன், சொத்துக் குவிப்பு வழக்குக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தார். இந்தத் தடை நீக்கப்பட்ட பிறகு தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்று, சசிகலா வாக்குமூலம் அளித்தார்.

கொந்தளித்த நீதிபதி

நீதிமன்றத்தை விமர்சித்த போதே கடும் காட்டத்தில் இருந்த மல்லிகார்ஜூனையா தொடர்ந்தும் சசிகலா சம்பந்தமே இல்லாமல் பேசுவதைக் கண்டு கொதித்தே போனார்.

"வழக்கு விசாரணை காலதாமதமாவதற்கு யார் காரணம் என்று கேட்கப்படாத நிலையில், தன்னுடைய புத்திசாலித்தனத்தை நிரூபிக்க முயற்சிக்கக் கூடாது. காலதாமதம் யாரால் ஏற்பட்டது, ஏன் என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. அதை வங்கியில் சேமிக்க முடியாது. எனவே, காலத்தின் அருமை கருதி சுருக்கமான, தகுந்த பதில்களை அளிக்க வேண்டும்" என்று சசிகலாவுக்கு கடும் கோபத்துடன் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் மணிசங்கரின் விளக்கத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 17-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைக்கு என்ன கிளப்புவாரோ சசிகலா?

English summary
A Special Court trying the disproportionate wealth case against Tamil Nadu Chief Minister J Jayalalithaa today pulled up her close aide and second accused Sasikala Natarajan for pointing fingers at others during her deposition in the case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X