For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலை உருவானது?, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?: ப.சி

By Chakra
Google Oneindia Tamil News

சிவகங்கை: தமிழகத்துக்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

தமிழக அரசு ஓராண்டு சாதனைப் பட்டியலை வெளியிடுவதில் தவறில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை செயல்படுத்தப்பட்டுள்ளன?. எத்தனை தொழிற்சாலை உருவானது?, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்பது போன்ற தகவல்களையும் பட்டியலிடவேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், இந்திரா காந்தி குழும வீடுகள் திட்டம், தேசிய குடிநீர் வழங்கும் திட்டம், தேசிய வேளாண் முன்னேற்றத் திட்டம், தேசிய ஊரக மருத்துவத் திட்டம், பின்தங்கிய பகுதிகள் மானியத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட 15 சிறந்த நிலைத்த திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இவை அனைத்தும் தமிழகத்துக்கும் கிடைத்து வருகின்றன. தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை.

கடந்த 2005-2010க்கு இடைப்பட்ட 5 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.36,688 கோடி நிதியை ஒதுக்கியது. 2010-2015க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் ரூ.83,432 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், ஒதுக்கவும் உள்ளது. எனவே, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாகக் கூறுவதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி இங்கு அமைக்கப்பட்டதற்கு அனைவரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அதை குறை கூறவில்லை. ஆனால், அந்தக் கல்லூரி ஏன் இன்னும் திறக்கப்படவில்லை?. 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளிலாவது இந்த கல்லூரி செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செயல்பட முடியவில்லை. 2012ம் ஆண்டிலாவது மருத்துவக் கல்லூரி செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

ஆனால், எனக்கு கிடைத்த தகவல்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் மருத்துவக் கல்லூரி துவங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இன்னும் இங்கு முழுமையாக அமலாகக்கப்படவில்லை. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல வசதிகளை இந்த மருத்துவக் கல்லூரியிலே, மருத்துவமனையிலே செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஜூன் மாதத்தில் தொடங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஜூலையிலோ, ஆகஸ்டிலோ மருத்துவக் கல்லூரியைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் தோட்டத்தில் முளைத்த பயிர் தான்...

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஆலங்குடியில் நடந்தது. அதில் பேசிய ப.சிதம்பரம்,

எந்த சூழ்நிலையிலும் நெருக்கடிகளை சமாளிக்கின்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. இந்த கட்சிக்கு வளர்ச்சி தான் உண்டு. தமிழகத்தில் சந்திரனைப் போல காங்கிரஸ் கட்சி இருக்கிறது. சந்திரன் 15 நாட்கள் தேயும், 15 நாட்கள் வளரும். இப்போது தமிழகத்தில் தேயும் நிலையில் உள்ளது. அடுத்து வளரும்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் நமது தோட்டத்தில் (காங்கிரஸ்) முளைத்த பயிர் தான் மாற்று கட்சியில் (அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமான்) போட்டியிடுகிறது என்றார்.

கார்த்திக் தொண்டைமான் காங்கிரசிலிருந்து அதிமுகவுக்குச் சென்றவர் என்பதும், தொண்டைமானின் தந்தை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu is not being ignored by the Centre and big allocations are being made to TN schemes, said Home Minister P. Chidambaram. He was speaking in public meeting at Sivaganga
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X