உம்மன் சாண்டி பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தந்திரமான ஏமாற்று வேலை: வைகோ குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vaiko
சென்னை:  முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயன்றால் கேரளா செல்லும் அனைத்து சாலைகளிலும் நிரந்தர தடை ஏற்படுத்தி பொருளாதார முற்றுகை போடப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேற்றைய தினம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகளோடும், வைகோ அவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்த செய்தி கேரள ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இது கேரள அரசின் வஞ்சகமான ஒரு சூழ்ச்சித் திட்டமாகும். பென்னிக் குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை இன்னும் 900 ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டிற்கே சட்டபூர்வமான உரிமையுள்ள அணையாகும். அதற்குப் பின்னரும் அந்த உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் விதத்தில்தான் ஒப்பந்தம் முன்னர் போடப்பட்டது.

இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக 1979ல் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று அப்பட்டமான ஒரு பொய்யை கேரளத்தின் சில ஏடுகளும், ஆட்சியாளர்களும் பரப்பியதால் நியாயமற்ற முறையில் அன்றைய முக்கூட்டுப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு அணை நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.

2001ம் ஆண்டு ஜனவரியில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் கே.சி.தாமஸ் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்றும், நீர் மட்டத்தை 145 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்ததால் கேரள அரசு சட்டமன்றதைக் கூட்டி நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.

கேரள முதல்வரும், தமிழக முதல்வரும் இதனை அடுத்து டெல்லியில் சந்தித்து இதுபற்றி நடத்திய பேச்சுவார்த்தை 20 நிமிடங்களில் கவைக்கு உதவாமல் போயிற்று. ஏற்கனவே இப்பிரச்சனை குறித்து முதல்வர்கள் மட்டத்தில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர்கள் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில் 22 முறை நடைபெற்று கேரளம் கடைப்பிடித்த நியாயமற்ற அநீதியான அணுகுமுறையால் பலனற்றுப் போயிற்று.

அணை வலிமை குறித்து பிரார் தலைமையிலான குழுவும், மிட்டல் தலைமையிலான குழுவும் ஆய்வு செய்து அணை வலுவாக இருக்கிறது. பூகம்பத்தாலும் ஆபத்து நேராது என்று அறிக்கைகள் தந்த பின்னணியில், உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ல் அணை பலமானது என்றும், தண்ணீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்திக் கொண்டு 152 அடி வரை உயர்த்தலாம் என்றும் கேரள அரசு இதற்கு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும் தீர்ப்பு அளித்தது. ஆனால் கேரள அரசு அந்தத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு, முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசின் அணைப் பட்டியலில் புதிதாகச் சேர்த்துக்கொண்டு நீர் மட்டம் 136 அடி தான் என்றும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுத்து அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தை செல்லாததாக ஆக்கவேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் தற்போது நிலுவையில் இருக்கிறது.

கேரளம் நயவஞ்சகமாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்து உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளிக்க இருந்த சமயத்தில் வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியதற்கு அன்றைய திமுக அரசும் உடன்பட்டதால், வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்குச் சென்றது.

அதனால்தான் நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பென்னி குயிக் அணை வலுவாக உள்ளது என்றும், அணைக்கு ஆபத்து இல்லை என்றும், நீர் மட்டத்தை 142 வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதே குழு நியாயமற்ற முறையில் மத்திய அரசின் அனுமதி பெற்று கேரளம் புதிய அணையும் கட்டிக்கொள்லாம் என்றும் யோசனை கூறியுள்ளது. இதில் தான் தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது. கேரள அரசு ஏற்கனவே புதிய அணை கட்ட ரூ. 660 கோடி ஒதுக்கப்படும் என்றும், தமிழகத்திற்கு உரிமையான பென்னி குயிக் அணையை உடைப்பதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், இதுவரை ஆண்டுக்கு 130 கோடி வீதம் 32 ஆண்டுகளில் 4,160 கோடி ரூபாய் நட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று தமிழக நலனுக்கு எதிராகத்தான் கே.டி.தாமஸ் கருத்தை பதிவு செய்துள்ளார். பென்னி குயிக் அணை பாதுப்பாக இருக்கிறது என்று ஐவர் குழு கருத்துக்கு உடன்பட்டதனால் தான் கேரளத்தில் அவருக்கு கண்டனமும் எதிர்ப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையில் கடந்த வருடம் கேரள சட்டமன்றத்தில் தண்ணீர் மட்டத்தை 120 அடிக்கு குறைக்க வேண்டும் என்று மேலும் அக்கிரமமான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். கேரள அரசு வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அணை பாதுகாப்பானது என்றும், வாதத்திற்காக உடையும் என்றாலும் 142 அடிக்கு உயத்தி இருந்தாலும் வெறும் 6 டி.எம்.சி. கொள்ளளவு நீர்தான் வெளியேறும் என்றும், 70 டி.எம்.சி.கொள்ளவு கொண்ட இடுக்கி அணை அதனை ஏற்றுக்கொள்ளும் என்றும், முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே மொத்தம் 450 குடும்பங்கள்தான் வசிக்கின்றனர் என்றும் கூறி கேரள அரசின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினார்.

ஆனந்த் தலைமையிலான குழுவின் ஆய்வுக்கு உள்ளான பென்னிக் குயிக் அணையில் போடப்பட்ட 8 ஆழ்துளைகளை மூடவிடாமல் தமிழக அரசின் பொறியாளர்களை கேரள அதிகாரிகள் அராஜகம் செய்து தடுத்து வருகின்றனர்.

அணையை உடைப்பதற்கான கேரளத்தின் சதித் திட்டமும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. பென்னி குயிக் அணையால் கேரளாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை கேரள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிலே இருந்துதான் கேரளாவிற்கு அரிசி, பருப்பு, காய்கறி, பால், ஆடு மாடுகள் சென்றாக வேண்டும். பென்னிக் குயிக் அணையை கேரளம் உடைக்க முயற்சித்தால் அனைத்துச் சாலைகளிலும் நிரந்தரத் தடை ஏற்படுத்தி பொருளாதார முற்றுகை போடுவது தவிர்க்க இயலாது என்பதையும், அதனால் கேரள மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், அணையை உடைத்தால் இருதரப்பிலும் ஏற்படும் விபரீதங்கள் துன்பத்தில் முடியும் என்பதையும் கேரள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே கேரள முதல்வர் கூறும் பேச்சுவார்த்தை என்பது ஒரு தந்திரமான ஏமாற்று வேலையாகும்.

புதிய அணை கட்ட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நமக்கு உரிமையான பென்னிக் குயிக் அணையை உடைப்பதற்கு கேரள அரசும், அரசியல் கட்சிகளும் சதித்திட்டம் தீட்டி வருவதால் தமிழக அரசும் தமிழக மக்களும் மிகவும் விழிப்போடு இருந்து நமது அணையையும், தென்தமிழ்நாட்டையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK chief Vaiko told that if Kerala tries to demolish Muallai Periyar dam, then all the roads leading to Kerala from TN will be bolcked for ever.
Please Wait while comments are loading...