For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி ஊழல்: என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்- பிரதமர்

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: அன்னா ஹசாரே குழுவினர் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்தும் பொது வாழ்வில் இருந்தும் விலகுவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 14 மத்திய மந்திரிகள் மீது ஊழல் புகார்களை கூறினர்.

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கூறிய அவர்கள், நிலக்கரித்துறை பிரதமர் மன்மோகன் சிங் வசம் இருந்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் குத்தகை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக அவர் மீது மிகக் கடுமையான புகார்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் மியான்மர் பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் நாடு திரும்பிய பிரதமரிடம் நிருபர்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது,

என் மீதும் அமைச்சர்கள் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் துரதிருஷ்டவசமானவை. பொறுப்பற்ற வகையில் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில் உண்மைத் தகவல்களை உறுதி செய்யாமல் பேசியுள்ளனர்.

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கசிந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக சிஏஜியிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த அறிக்கையையும் வரவில்லை. அது கிடைத்தவுடன் முழுமையான, உண்மையான தகவல்களை பொதுக் கணக்குக் குழு முன் அரசு அளிக்கும்.

என் மீதான ஊழல் புகாரை அவர்கள் நிரூபித்தால் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். இந்த தேசம் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.


மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி என் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பிரதமர் என்ன தவறு செய்தார் என்பது பற்றி இந்திய மக்கள் முடிவு செய்யட்டும். அவர்கள் கூறியுள்ள புகாரை கவனத்தில் கொண்டு நாட்டில் என்ன மாதிரியான அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றி அவர்கள் தீர்மானிப்பார்கள் என்று கருதுகிறேன்.

நான் நிதியமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தேன். இப்போது பிரதமராக உள்ளேன். அனைத்துப் பொறுப்புகளில் இருந்தபோதும் திறந்த புத்தகமாகவே இருந்துள்ளேன் என்றார் மன்மோகன் சிங்.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து மன்மோகன் சிங் இப்போதுதான் முதல்முறையாக பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹசாரே குழுவில் பிளவு:

இதற்கிடையே பிரதமர் மீதான குற்றச்சாட்டை ஹசாரே குழுவில் உள்ள சிலரே ஏற்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டை அன்னா ஹசாரேவே ஏற்கவில்லை. பிரதமர் நேர்மையானவர் என்று கூறியுள்ள அவர், டெல்லி செல்லும்போது, எனது குழுவினரிடம் ஊழல் புகார் பற்றி விளக்கம் கேட்பேன் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரசாந்த் பூஷண்,

எந்த அமைச்சர்கள் மீது என்ன புகார்கள் இருக்கின்றன என்று அன்னா ஹசாரேவுக்கு தெரியும். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பான மொத்த விவகாரமும் அவருக்குத் தெரியாது. நாங்கள் சரியான காரியத்தையே செய்வோம் என்று எங்கள் மீது அவர் நம்பிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் பற்றிய ஊழல் புகார் தொடர்பான பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. அன்னா ஹசாரேவுக்கு ஆங்கிலம் தெரியாததால், அவற்றை படித்து பார்க்க முடியாது. அவர் படித்து பார்க்க வசதியாக, அந்த ஆவணங்களை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டியுள்ளது. ஆனால் குறுகிய இடைவெளியில் மொழி பெயர்ப்பது சாத்தியமல்ல என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நாங்கள் கூறிய எல்லா விஷயங்களும் அன்னா ஹசாரேவுக்கு தெரியும். அவர் விரும்பினால், அவர் டெல்லி வரும்போது, இதுதொடர்பான ஆவணங்களை காட்ட தயாராக இருக்கிறோம்.

கடந்த மார்ச் மாதம் உண்ணாவிரதத்துக்காக அவர் டெல்லி வரும்போதே ஒவ்வொரு அமைச்சர் பற்றிய ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவரிடம் விளக்கிக் கூறினோம். அவர் சொன்னதால்தான், ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கே கடிதம் எழுதினோம்.

நாங்கள் நிலக்கரி மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பெயரைக் குறிப்பிட்டே நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினோம். ஆனால், ஊழல் நடந்த நேரத்தில், பிரதமர்தான் அந்த பொறுப்பை வகித்தார் என்று பின்னர் தெரிந்து கொண்டோம் என்றார்.

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே:

இதற்கிடையே, பிரதமர் மீதான குற்றச்சாட்டை அன்னா ஹசாரே குழுவின் மற்றொரு உறுப்பினர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவும் நிராகரித்துள்ளார். அவர் கூறுகையில், பிரதமர் மற்றும் 14 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. இதற்கு நான் மறுப்பு தெரிவிக்காவிட்டால், எனக்கு இதில் உடன்பாடு இருப்பதாக எல்லோரும் நினைத்து விடுவார்கள் என்பதால் மறுப்பு தெரிவிக்கிறேன்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அன்னா ஹசாரே குழுவினர் என்ன ஆதாரங்கள் வைத்துள்ளார்கள் என்றோ, என்ன அடிப்படையில் குற்றச்சாட்டு கூறினார்கள் என்றோ எனக்குத் தெரியாது. ஒரு வேளை அந்த ஆதாரங்களை பார்த்து நான் சமாதானம் அடைந்தால், அதை ஏற்றுக் கொள்வேன். அதே சமயத்தில், நான் ஹசாரே குழுவில் இருந்து விலகவில்லை என்றார்.

English summary
An emotional Prime Minister Manmohan Singh on Tuesday hit back at Team Anna's allegation of corruption against him in coal block allotments, saying he would give up public life if charges levelled by the activists were proved. "I will give up my public life even if there is an iota of truth in allegations levelled against me, and the country can give me my punishment. My long public career as finance minister, as leader of opposition in Rajya Sabha and now as prime minister has been an open book," he said on the way back from Myanmar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X