For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் நடத்த உயர் நீதிமன்றம் தடை

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் வீரமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தடை விதித்தனர். மேலும் நூலகம் செயல்படுவதற்கு தேவையான வசதிகளை குறைக்ககூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந் நிலையில் இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக முறையிட்டார்.

மேலும் அவர் வாதாடுகையில், நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி கிடையாது. 2 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்த நூலகத்தின் வசதிகளை குறைக்ககூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அரசு மீறி உள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள் அரசு வழக்கறிஞர் வெங்கடேசனிடம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த எப்படி அனுமதித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வெங்கடேசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க மாட்டோம். நூலக வசதிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்களை தடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, இனிமேல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. நடந்த சம்பவம் குறித்து அரசு விளக்கமான மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்தனர்.

கலை விழாக்கள் அல்லது கல்வி நிறுவன நிகழ்ச்சிகளே இதுவரை நடைபெற்று வந்த நூலக அரங்கில், சனிக்கிழமை நடந்த திருமண வரவேற்பின்போது கடும் இரைச்சல் நிலவியது. மேலும் சமையலுக்கு ஸ்டவ்களூம் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமண வரவேற்புக்கு வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு விட்டுச் சென்ற மிச்சங்கள் ஒருபுறம் நூலகத்தை நாறடித்தது.

நீதிமன்ற தீர்ப்புக்கு கருணாநிதி வரவேற்பு:

இந் நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், கோர்ட்டின் உத்தரவு வரவேற்கதக்கது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு இது என்றார்.

English summary
The auditorium at Anna Centenary Library, which the ADMK-led government proposes to convert into a children's hospital, is now being turned into a venue for receptions and parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X