For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலி போல பாய்ந்திருக்க வேண்டாமா மத்திய அரசு... ஜெ. ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: புலி போல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது. இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும், எனது கடும் கண்டனத்தையடுத்தும், இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்திலிருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் வரப் பெற்றவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், தமிழினத் தலைவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்.. என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம் என்று தமிழ் உணர்வே இல்லாமலும், நழுவலாகவும் பேசியிருக்கிறார்.

இதை நினைக்கும் போது, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக மத்திய அரசை எதிர்த்து மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றி, கடைசியில் அதையும் கைவிட்ட நிகழ்ச்சி தான் நினைவிற்கு வருகிறது.

தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த நடவடிக்கைகள் உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம் என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன.

தமிழ் இனத்தின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தான் தாங்கிப் பிடித்திருக்கும் மத்திய அரசை வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும் இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசை மிரட்டி சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கைத் தமிழர் நலனுக்காக அவ்வாறு செயல்படாதது அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது.

புலி போல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

English summary
Chief Minister Jayalalitha has slammed DMK chief Karunanidhi for his noncommittal stand on the training to SL solders in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X