For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணீர் வடிக்கும் தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலை திணிப்பதுபோல் செயல்படும் மத்திய அரசு: வைகோ தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தாய்த் தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டு, நம் தலையிலேயே மிதிப்பது போன்ற மத்திய அரசின் அராஜகப் போக்கை நீண்ட காலத்திற்கு இனியும் மூடி மறைக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈழப் போரில் ஈடுபடாத, ஆயுதம் ஏந்தாத தமிழர்களை- குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர் உட்பட இலட்சக் கணக்கானவர்களை சிங்கள விமானப்படையும், இராணுவமும் கொன்று குவித்தது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் அமைத்த மூவர் குழுவின் அறிக்கை இந்த உண்மையை ஆதாரங்களோடு வெளியிட்டது. மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் வீரத்தாய் பார்வதி அம்மையார் சடலம் எரியூட்டப்பட்ட சிதையில் மூன்று தெரு நாய்களை சுட்டுக் கொண்டுவந்து சிங்கள இராணுவத்தினர் அந்தச் சிதையில் வீசிய கொடுமை உலகில் எங்கும் நடைபெறாதது ஆகும்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ, இந்தத் தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளியான காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, அரசு கொடியவன் ராஜபக்சேவையும், அவனது அமைச்சர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்கிறது. சிங்கள இராணுவத்தினரையும் அழைத்து வந்து பயிற்சி கொடுக்கிறது.

சிங்கள அரசுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக சிங்கள அரசுக்கு, இந்திய அரசு பல துறைகளிலும் உதவி வருகிறது. இலங்கைக்கு மின்சாரம் வழங்க கடல் வழியில் கேபிள்களைப் பதிக்கிறது.

சிங்களவனுக்கு உதவவே தமிழ் நாட்டில் பெரம்பூரில், தமிழர்களின் வியர்வையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை அனுப்பி வைக்கிறது. அண்மையில் சிங்கள விமானப் படையினருக்கு தாம்பரத்தில் பயிற்சி கொடுப்பதை அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அப்படையினரை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று உடனடி முற்றுகைப் போராட்டம் நடத்தியது. தமிழக முதல்வரும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணித்தரமாகத் தெரிவித்தார். பல அமைப்புகளும் போராடின.

இதன்பின்னர் சிங்கள விமானப் படையினரை தமிழ்நாட்டிலிருந்து, பெங்களூருக்குக் கொண்டுசென்று ஏலஹன்கா தளத்தில் பயிற்சி அளிக்கின்றனர். இது மத்திய காங்கிரஸ் அரசின் ஆணவத்தின் அராஜகபோக்கின் வெளிப்பாடாகும்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில், குன்னுரை அடுத்த வெலிங்டனில் இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கெடுக்க சிங்கள இராணுவத்தின் ஒரு கடற்படை அதிகாரியையும், தரைப்படை உயர் அதிகாரியையும் இந்திய அரசு வரவழைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து விருந்தும் கொடுத்தது. செய்தி அறிந்தவுடன் அவர்களை வெளியேற்றச் சொல்லி, அறப்போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்த சிங்கள அரசுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் இந்திய அரசு பெருமளவில் உதவி வருவது கண்ணீர் வடிக்கும் தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலை திணிப்பதுபோல் உள்ளது. சிங்கள இராணுவத்தினரை இங்கே வரவேற்பதும், உபசரிப்பதும் இந்திய அரசு தமிழர்களுக்குச் செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகங்கள் ஆகும்.

நமது தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் வந்து தாக்குவதும், சுட்டுக்கொல்வதும் எண்ணற்ற முறை நடந்த போதிலும் இந்திய அரசும், இந்திய கடற்படையும் அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால்தான் நேற்றைக்குக்கூட ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் சிங்கள கடற்படையினரால் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.

தங்கள் தாயகமாம் தமிழ் ஈழ விடுதலைக்கு மகத்தான தியாகம் செய்து போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டையும் பிரித்து ஈழம் அமைக்க முயன்றனர் என்ற அபாண்டமான பொய்யை மையமாக்கி புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. தமிழ்க் குலத்திற்கு இந்திய அரசு செய்து வரும் அனைத்துத் துரோகங்களுக்கும் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் நிரந்தரப் பொறுப்பாளிகள் ஆவார்கள். தாய்த் தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டு, நம் தலையிலேயே மிதிப்பது போன்ற மத்திய அரசின் அராஜகப் போக்கை நீண்ட காலத்திற்கு இனியும் மூடி மறைக்க முடியாது. வரலாறு மன்னிக்காது என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko slammed UPA government for supporting Sri Lanka and its activities against the wishes of Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X