For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அபார்ஷன்' ஆகிப் போன அன்னா குழு!

Google Oneindia Tamil News

Team Anna
மும்பை: ஆரம்பத்திலிருந்தே உருப்படாத குழுவாகப் போய் விட்ட தனது குழுவைக் கலைத்துள்ளார் ஹசாரே.

இதுபற்றி அன்னா ஹசாரே தமது வலைப்பூவில் (ப்ளாக்கில்) கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்காக இக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குழுவின் பணி இப்போது முடிந்து போய்விட்டது. மத்திய அரசுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. அதனால் அன்னா குழு கலைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அன்னாவின் இந்தப் பேச்சு மக்களிடையே அவரது குழுவினர் அதாவது கலைக்கப்பட்ட குழுவினர் குறித்த கேலிப் பேச்சை மேலும் வலுவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

எதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டதோ, அதை கடைசி வரை இக்குழுவினர் எட்டவே இல்லை என்பதே உண்மை. இவர்களுக்குள் முதலில் நிலையான கருத்தொற்றுமை இதுவரை ஏற்படவில்லை. கேஜ்ரிவால் ஒன்று சொன்னால் அதை கிரண் பேடி மறுப்பார். கிரண் பேடி ஒன்று சொன்னால் அதை சந்தோஷ் ஹெக்டே ஏற்க மாட்டார். சந்தோஷ் ஹெக்டே ஏதாவது சொன்னால் அதை கேஜ்ரிலும், கிரண் பேடியும் சேர்ந்து மறுப்பார்கள். இவர்கள் அனைவரும் ஏதாவது ஒன்றைச் சொன்னால் அன்னாவுக்கு அது பிடிக்காது. கடைசியில் எல்லோரும் சேர்ந்து அன்னாவைத் தூக்கி வந்து உண்ணாவிரதத்தில் உட்கார வைத்து விடுவார்கள்.

ஏன் திடீரென தனது குழுவை அன்னா கலைத்தார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் குழு இருக்கப் போய்த்தானே இத்தனை குழப்பம், பேசாமல் கலைத்து விட்டால் என்ற அன்னாவின் மனதுக்குள் அடித்த 'மணி'தான், இந்த 'அபார்ஷனு'க்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உண்மையில் இதை அபார்ஷன் என்றுதான் கூற வேண்டும். வளராமல் பாதியிலேயே வெம்பிப் போய் விட்ட கருவைப் போலத்தான் அன்னா குழுவின் செயல்பாடுகளும் இது நாள் வரை இருந்து வந்துள்ளன.

சில பல பாயிண்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு வறட்டுப் பிடிவாதமாக அவர்கள் கோஷம் போட்டு வந்ததால்தான் இத்தனை பிரச்சினைகளும். மக்களைப் பாதிப்பது ஊழல் மட்டுமே என்ற தவறான எண்ணத்திலும், மன ஓட்டத்திலுமாக அவர்கள் தங்களை ஒரு சுருட்டு போல சுருக்கிக் கொண்டு விட்டனர். மாறாக, மக்கள் பிரச்சினைகளை முழுமையாக, விரிவாக கையில் எடுத்துக் கொண்டு போராடியிருந்தால் மக்களின் ஏகோபித்த ஆதரவு இவர்களுக்குக் கிடைத்திருக்கும் - காரணம், அரசியல்வியாதியால் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் அதைச் செய்யத் தவறி விட்டது அன்னா குழு.

மக்களின் அத்தனைப் பிரச்சினைகளையும் பட்டியலிட்டு, இத்தனைப் பிரச்சினைகளையும் இப்படி தீர்க்கப் போகிறோம் என்று மக்களிடமே தெளிவான குரலில், ஒரே குரலில் இவர்கள் சொல்லி விட்டு களத்தில் குதித்திருந்தால் இன்னேரம் இந்திய மக்கள் பெரும் புரட்சியை செய்திருப்பார்கள் அன்னா தலைமையில். அதையும் செய்யத் தவறி விட்டது அன்னா குழு.

மும்பை போராட்டம் தோல்வியில் முடிந்தபோதே, சந்தோஷ் ஹெக்டே கூறினார். அன்னா குழுவின் போராட்டம் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. போராட்ட நோக்கத்திலிருந்து குழு உறுப்பினர்கள் விலகிகப் போக ஆரம்பித்து விட்டனர். இதனால்தான் மக்களும் சுணங்கிப் போய் விட்டனர். கொள்கைகளை சீர்திருத்தி, புதிய பொலிவோடும், தெளிவோடும் போராட வேண்டும். இதற்கு அனைவரும் உட்கார்ந்து பேச வேண்டும் என்று கூறினார்.

ஆனால் கேஜ்ரிவால் அதை செய்யவே அனுமதிக்கவில்லை. ஹெக்டே எங்கே அன்னாவுடன் பேசி விடப் போகிறாரோ என்று பயந்து பயந்து அன்னாவை அடை காப்பது போல தடுத்து வந்தார். யாருமே ஒன்றாக உட்கார்ந்து பேசுவதில்லை. ஆளுக்கு ஒரு கருத்தை உருவாக்கி அதை மொத்தமாக வாங்கி அறிக்கையாக அனுப்பி வைப்பதே வழக்கமாகி விட்டது. இவர்கள் ஒரு குழுவாகவே இயங்கவில்லை என்பதே உண்மை.

உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் அன்னா..? ஊழலுக்கு எதிரான இயக்கம் என்று ஆரம்பித்து விட்ட பின்னால், அதை ஒரு ஜனநாயக அமைப்பாக மாற்றியிருக்க வேண்டும். ஒரு தலைவர், ஒரு கொள்கை வகுக்கும் குழு என்று போயிருக்க வேண்டும். இதெல்லாம் அரசியலுக்குத்தான் சரிப்படும் என்று விதண்டாவாதம் பேச முடியாது. காரணம், அமைப்பு என்று ஒன்றை உருவாக்கினால், அதற்கான அங்கங்களும் இருக்க்த்தானே வேண்டும்!.

இந்தியா முழுவதும் எத்தனையோ 'ஆக்டிவிஸ்டுகள்' இருக்கிறார்கள். கிரண் பேடியை விட திறமை படைத்த, தெளிவான பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் சிலரை குழுவில் சேர்த்திருக்கலாம். கேஜ்ரிவாலைப் போன்ற 'அறிஞர்கள்' நாட்டில் பலர் உள்ளனர். அவர்களிலும் சிலரை இணைத்திருக்கலாம். சிஸோடியாவைப் போல பலர் நாட்டில் உள்ளனர். அவர்களில் சிலரைச் சேர்த்திருக்கலாம். ஆனால் என்ன செய்தது அன்னா குழு..?. கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள சிலரை மட்டும், அதாவது வட இந்தியாவில் உள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு செயல்பட்டார்கள். இது ஒரு குழுவாம், இவர்கள் இந்தியாவின் முகத்தையே மாற்றி அமைத்து விடுவார்களாம். என்னங்க காமெடி இது...!!

இப்படி 'கோக்குமாக்காவே' ஆரம்பிக்கப்பட்டு 'கோணல் மானலாக'வே செயல்பட்டு வந்த குழுவைத்தான் அன்னா கலைத்துள்ளார். அந்த வகையில் அன்னா ஒரு 'டாக்டராகி' விட்டார்!!

எப்படியோ, சரிவர வளராத ஒரு குழந்தையை ஆபரேஷன் செய்து கலைத்து விட்டார் அன்னா. அடுத்து, 'புதிதாக' உருவாகப் போகிற குழந்தையாவது (அரசியல் கட்சி) நல்லபடியாக சுகப் பிரசவமாக பிறக்க வேண்டும் என்றால் அன்னா ஆரம்பத்திலேயே முறையாக 'செக்கப்புகளைச்' செய்து, நல்ல செயல் திறனுள்ள உறுப்பினர்களைத் தேர்வு செய்து, முறையாக பார்த்துக் கொண்டால்தான் உண்டு. இல்லாவிட்டால் இன்னொரு அபார்ஷனுக்கும் அவர் தயாராக வேண்டியதுதான்.

English summary
Dismantling of Team Anna has been seen as a big setback to Anna Hazare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X