For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழம் என்ற சொல்லையே தடை செய்ய துணிந்துவிட்டதா மத்திய அரசு?: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

Velmurugan
சென்னை: ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் வாழ்வில் ஒன்றிப் போன பழந்தமிழ் சொல்லான "ஈழம்": என்பதையே பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்திருப்பது தமிழினத்தின் மீதான உச்சகட்ட அடக்குமுறையின் வன்மத்தின் வெளிப்பாடு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுக ஏற்பாட்டில் நடத்தப்படும் "தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்" (டெசோ) மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து டெசோ அமைப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இது திமுகவுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான விவகாரம் மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் உச்சகட்ட வன்மத்தின் துரோகத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடுதான் - என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

"ஈழம்" என்ற சொல்லை தடை செய்ய இந்திய மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து எங்கள் தமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே பயன்பாட்டில் இருந்து வரும் சொல்தான் "ஈழம்"!

"ஈழநாடு" என்பது கடலில் மூழ்கிப் போய்விட்ட குமரிக் கண்டத்தில் இருந்த நாடுகளில் ஒன்று. தமிழரின் வரலாற்றைச் சொல்லும் அத்தனை இலக்கியங்களிலும் ஈழம் என்ற சொல் இல்லாமல் இருந்ததே இல்லை.

முத்தொள்ளாயிரத்தில் சோழரின் ஆட்சிப் பரம்பல் இப்படிக் கூறப்படுகிறது

"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு" என்கிறது அந்தப் பாடல்

ஈழக் காசு, ஈழக் கழஞ்சு, ஈழச் சேரி என பல்வேறு சொற்றொடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வியலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் "இந்தியா" "இந்திய மத்திய அரசு" என்ற சொல்லெல்லாம் "கண்டுபிடித்து" புழக்கத்தில் நடமாடுவதற்கு முன்பே இந்த மண்ணில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரத்துடனும் தீரத்துடனும் உலா வந்த சொல்தான் "ஈழம்" !

ஈழம் எனும் நிலப்பரப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்த மொழி, பண்பாடு, ஆட்சி அதிகாரத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஈழத்து தேசத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் தமிழர்கள்.

கடந்த 60 ஆண்டுகளாக சிங்களவர்களின் பேரினவாத அகோரத்தில் அகப்பட்டு தங்களது வரலாற்று உரிமைகளை பறிகொடுத்த நிலையில்தான் "தமிழீழ"த் தனியரசு ஒன்றுதான் தீர்வு என்பதை தந்தை செல்வா காலத்திலேயே திட்டவட்டமாக உணர்த்தியவர்கள் ஈழத் தமிழர்கள்.

தந்தை செல்வா போன்ற பெருந்தலைவர்களின் அகிம்சை போராட்டட்துக்கு பயனில்லாமல் போனதாலேயே " தமிழீழ" தனியரசு என்ற லட்சியத்தை அடைய தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி போராடினர்.

ஆனால் இந்திய மத்திய அரசின் துரோகத்தால் இலங்கைத் தீவில் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டன. அங்கு ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டிருந்தாலும் தமிழர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வு "தனித் தமிழீழம்"தான் என்ற கோரிக்கை ஒன்றும் மெளனிக்கப்பட்டுவிடவில்லை.

இப்படியான இனத்துரோகமும் தமிழினத்துக்கு எதிரான இந்தியாவின் வெறியும் இன்னமும் அடங்கவில்லை என்பதன் வெளிப்பாடே "ஈழம்" என்ற சொல்லுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை!

தமிழீழத்தில் மூன்றரை லட்சம் உறவுகளை கொத்து கொத்தாக படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவின் வலதுகரமாக இந்திய மத்திய அரசு செயல்பட்டது என்பதை எப்போதும் உலகத் தமிழர்கள் மன்னித்துவிடப் போவதில்லை.. தமிழர்களின் மனதில் இந்தியாவின் துரோகம் எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது...

ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டும... தமிழ்நாட்டின் நியாயமான எந்த ஒரு உரிமையையும் இந்திய மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற கடுஞ்சினம் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்தும் இருந்து வருகிறது.

தமிழகத்தின் அத்தனை ஆற்று நீர் உரிமைகளையும் கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. காவிரி ஆற்றிலும் பாலாற்றிலும் முல்லைப் பெரியாறு ஆற்றிலும் தமிழ்நாட்டுக்குர் உரிய நீர் உரிமைகளை அப்பட்டமாக இந்த மாநிலங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்திய போதெல்லாம் மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்ட போதெல்லாம் வாய்மூடி கள்ள மவுனியாக இருக்கிறது மத்திய அரசு...

காவிரி நதியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் தரமறுத்துவிட்டதால் தமிழகத்தின் 11 மாவட்டங்கள் வறட்சியின்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதில் தலையிட்டு உரிய தீர்வு காண அக்கறைக்காட்டாமல் இருக்கிறது மத்திய அரசு...

தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி தமிழக முதல்வர் டெல்லி சென்று வலியுறுத்திய போதும்கூட அந்தக் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது மத்திய அரசு...

இலங்கையில் அந்த நாட்டுக்கும் கடல் எல்லைக்கும் சம்பந்தமே இல்லாத சீனர்களை மீன்பிடிக்க சிங்கள அரசு அனுமதிக்கிறது. ஆனால் கடற்பரப்பில் மீன்பிடியுள்ள தமிழகத்து தமிழர்கள் மீன்பிடித்தால் மரணம்தான் தண்டனை என்று சிங்களம் கோரத் தாண்டவமாடுகிறது. அப்படிப்பட்ட கொலைகார சிங்கள அரசை தட்டிவைக்க துணிச்சல் இல்லாத நிலையில்தான் இருக்கிறது மத்திய அரசு... இது தொடர்பாக எத்தனை எத்தனை கடிதங்கள் தமிழக அரசாங்கங்களால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்? எத்தனை எத்தனை போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம்?

இதுவரை வாயே திறக்காமல் தமிழர்கள் மீதான கடற்படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்து தமிழினத்தின் எதிரியாகவே வலம் வருகிறது இந்திய மத்திய அரசு!

எங்கள் தொப்புள் கொடி உறவுகளை லட்சக் கணக்கில் படுகொலை செய்து சர்வதேசத்தின் முன் போர்க்குற்றவாளியாக இருக்கும் சிங்களக் காடையர்களுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது என்று பலமுறை நாங்கள் போராட்டம் நடத்தியும் எங்கள் தமிழ் மண்ணில் சிங்களவனுக்கு இன்னமும் பயிற்சி கொடுத்துக் கொண்டு தமிழகத்தை சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய மத்திய அரசு...

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் கூட அதைப் பறி கண்டு கொள்ளாமல் இலங்கை தலைநகர் கொழும்பில் பலநூறு இந்திய தொழில்நிறுவனங்களைக் கொண்டு போய் இறக்கி கண்காட்சி நடத்துகிறது மத்திய அரசு!

தமிழகத்து உரிமைகளை பிற மாநிலங்கள் வேட்டையாடி குழிதோண்டி புதைத்துக் கொண்டிருப்பதை பற்றி அக்கறை செலுத்த மறுத்துக் கொண்டு இருக்கிற மத்திய அரசு.... தமிழ்நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனையான ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கொலைகார இனவெறி சிங்களவனைப் போலவே செயல்படுவதை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது...

தமிழகத்தின் எந்த ஒரு உணர்வையுமே புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் சிங்கள ராஜபக்சே அரசாங்கத்தைப் போல இந்திய மத்திய அரசு செயல்படுவது என்பது தமிழகத்து இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான சிந்தனையை கூர்மைப்படுத்தவே செய்யும் - இந்தியாவிலிருந்து இயல்பாகவே தமிழர்களை அன்னியப்படுத்தும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.

அதுமட்டுமின்றி திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் இப்பொழுதும் சரி ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எந்த ஒரு நிலைப்பாடு எடுத்தாலும் டெல்லியிலிருந்து ப.சிதம்பரத்தை, பிரணாப் முகர்ஜியை ஏ.கே.அந்தோணியை அனுப்பி திமுகவை பணிய வைப்பதையே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.

முள்ளிவாய்க்கால் போரின்போது மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் தமிழகத்து எம்;பிக்கள் 40 பேரும் ராஜினாமா செய்திருந்தால் மூன்றரை லட்சம் உறவுகளை தமிழினம் காவு கொடுத்திருக்க நேரிட்டிருக்காது என்பதை திமுக எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்பொழுதும் காலம் கடந்து போய்விடவில்லை.. ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்ற துணிச்சல் மத்திய அரசுக்கு இருக்கும்போது தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் சுயமரியாதை கொள்கை வழியில் உருவான திராவிட முன்னேற்றகழகம் தமது பழைய போர்க்குணத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய தருணம் இது....இனியும் மத்திய அரசுக்குப் பணிந்து போவதில் அர்த்தம் இல்லை என்பதே தமிழர்களின் உளமார்ந்த எதிர்பார்ப்பு.

ஈழம் என்ற சொல்லைக் கூட உச்சரிக்கக் கூடாது என்று கூறும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கான ஆதரவை இப்போதாவது திமுக உதறி எறிய வேண்டும்.

ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாட்டில், ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தமிழீழமே என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வஞசக மத்திய அரசுசின் வன்மத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.

தமிழீழத் தனியரசு அமைக்க ஈழத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் வாழும் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழீழத் தனியரசு அமைப்பதற்கான அரசியல் போர்க்களங்களை திராவிட முன்னேற்றக் கழகம் பிரகடனப்படுத்த வேண்டும்.

இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மத்திய அரசு கொடுக்கும் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் லட்சோப லட்சம் தொண்டர்களும் சர்வபரி தியாகத்துக்கும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Unfazed by the Ministry of External Affairs letter asking the Tamil Eelam Supporters Organisation (TESO) conference to drop the word Eelam from the title of the conference, TVK president T. Velmurugan said that Eelam was not an imaginary word.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X