For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவத்துக்கு சீனா உதவியுடன் குடியிருப்பு- இந்தியாவுக்கு ஆபத்து- தமிழர் கட்சி எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு கிழக்கில் இலங்கை ராணுவத்தினருக்கு சீனா குடியிருப்புகளை ஏற்படுத்துவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவின் உதவி

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாக இருக்கின்றது. ஏற்கெனவே திருமுறிகண்டியில் நான்காயிரம் ஏக்கருக்கு மேல் எடுக்கப்பட்டு, அங்கு சீன உதவியுடனான இராணுவக் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படை முகாம் நிறுவப்பட்டுள்ளதுடன், கடற்படையினருக்கான குடியிருப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது சீன அரசாங்கம் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி வடக்கு, கிழக்கில் இராணுவத்திற்கான கட்டுமானங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவதற்கும் நீண்டகால அடிப்படையில் இந்தக் கடனுதவி வழங்கப்படுகின்றது.

வடகிழக்கில் 1 லட்சம் ராணுவத்தினர்

இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினர் அதாவது இருபது டிவிசன் இராணுவத்தினர் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இதில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வடக்கு, கிழக்கில் இருப்பதாக நம்பப்படுகின்றது. இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவதன் மூலமும் அவர்களது குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலமும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலமும் வடக்கு, கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றி பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களிலேயே சிறுபான்மையினமாக்கும் முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் வித்திடுகின்றது.

திபெத் பாணியில் வடகிழக்கை கையாளும் சீனா

சீன அரசாங்கம் திபெத்தில் சீனர்களைக் குடியமர்த்தி எவ்வாறு திபெத்தியர்களைச் சிறுபான்மையாக்குகின்றதோ அவ்வாறே இலங்கையிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைச் சிறுபான்மையாக்க முயற்சிக்கின்றது. சீன அரசாங்கத்தைப் பொறுத்தவரை தனது சொந்த நலன்களும் தனது நாட்டின் பாதுகாப்பும்தான் பிரதானமாக இருக்கின்றது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் இந்திய உபகண்டத்தில் தனது கழுகுப்பார்வையை வைத்திருக்கவும் இலங்கையை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக வைத்திருக்க முயற்சிக்கின்றது.

இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

சீனாவின் இந்த செயற்பாடும் இலங்கை அரசாங்கத்தின் அதற்கான ஆதரவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் இந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலைகள் உருவாகவும் வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது. வடக்கு, கிழக்கில் அமைதியும் சமாதானமும் நிலவுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமானது. ஆனால் தொடர்ச்சியான சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு என்பது சாமாதான சகவாழ்விற்கு எந்தவிதத்திலும் துணைபுரியாது.

ஆகவே இந்திய உபகண்டத்தையும் தென்னாசியப் பிராந்தியத்தையும் தொடர்ச்சியான ஒரு பதற்ற நிலையில் வைத்திருப்பதற்குச் சீனா முயற்சிப்பதும் அதற்கு இலங்கை ஆதரவளிப்பதும் ஒட்டுமொத்தமான இலங்கையின் எதிர்கால நலன்களுக்குக் குந்தகமானது. இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக்கொள்கையை சரியான திசைவழிக்கு இட்டுச்செல்லாவிட்டால், இந்தநாடு மேலும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகலாம் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. இத்தகைய திட்டங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். மேலதிகமான இராணுவங்கள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவும் சரியான இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

English summary
The Lankan tamil party of Tamil National Alliance had opposed to build military housing in North East Sri Lanka with the China's help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X