உக்கிர டெங்கு- ஜெயலலிதா அவசர ஆலோசனை: மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள்!

டெங்கு காய்ச்சால் பலியாவோர் மற்றும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்துக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சர் தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பொது இடங்களில் கொசுக்களை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தம் வகையில், புகை மருந்து மூலம் கொசுக்களை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாமல், பருவ மாற்றம் காரணமாக பூச்சிகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது, குடிநீரைக் காய்ச்சி பருகுதல், நீர் பாத்திரங்களில் கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல், காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 800 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளை சேர்ந்த உயரதிகாரிகள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வையிட்டு வருகிறார்கள். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே ரூ.2 கோடியே 49 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் ரத்தம் தயார் நிலையில் உள்ளது.
எந்தப் பகுதியிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியவும், உடன் அதனை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், விரைவு ரத்த சோதனை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவினை அடிப்படையாகக் கொண்டு, டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகள் வெளிவருகின்றன.
எனவே, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்பதையும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிகம் பாதித்த மாவட்டங்கள்
சென்னை, வேலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை உலுக்கிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நர்மதா நேற்று உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 4 குழந்தைகள், ஒரு செவிலியர் உள்பட 8 பேருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை, வேலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு தலா ஒரு பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், பூச்சியியல் வல்லுநர் ஒருவர் மற்றும் இணை இயக்குநர்கள் என கொசு உற்பத்தியைத் தடுக்கும் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications