For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியுடன் பிரதமர்-சோனியா திடீர் சந்திப்பு: மத்திய அமைச்சரவை மாற்றம்?

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினர். இதையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆளும் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகியதுடன் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றது. அந்த கட்சியை சேர்ந்த ரயில்வே மந்திரி முகுல்ராய் உள்பட 6 மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 22ம் தேதி மத்திய அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. முகுல்ராய் வகித்து வந்த ரயில்வே துறை, காங்கிரசை சேர்ந்த தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சி.பி.ஜோஷியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

மேலும் 2ஜி விவகாரத்தில் ராசா, தயாநிதி மாறன் ஆகியோரும், வேறு சில காரணங்களால் சில அமைச்சர்களும் பதவி விலகியதால், அவர்கள் வகித்து வந்த இலாகாக்களை 8 அமைச்சர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள்.

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூடுதலாக தொலைத் தொடர்புத் துறையையும், சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூடுதலாக சிறுபான்மையினர் விவகாரத்துறையையும், நிறுவன விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதலாக எரிசக்தித்துறையையும், வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூடுதலாக சிறு குறு தொழில்துறையையும் கூடுதலாக கவனிப்பதால், அவர்களது சுமையைக் குறைக்க வேண்டியுள்ளது.

இந் நிலையில் கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரச்சனையில் முழுமையாக முடக்கப்பட்டது.

மேலும் டீசல் விலை உயர்வு, மானிய விலையிலான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற முக்கிய முடிவுகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜெகரிவால் குழுவினர் தினமும் ஒரு மத்திய அமைச்சர் மீது ஊழல் புகார்களை வெளியிட்டு வருகின்றனர். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதும் நில ஊழல்கள் கிளம்பியுள்ளன.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளும் அரசின் பொருளாதார சீர்திருத்த முடிவுகளை எதிர்த்து வருகின்றன. நாடாமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதை ஆதரிப்போம் என திமுகவும் கூறி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திடீரென ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். 1 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இருவரும் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆனால், மன்மோகன் சிங், சோனியா இருவரும் பிரணாப் முகர்ஜியை எதற்காக சந்தித்தனர் என்ற விவரத்தை ஜனாதிபதி மாளிகை வெளியிடவில்லை. துர்கா பூஜை வாழ்த்து சொல்லவே பிரணாபை இருவரும் சந்தித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்த இருவரும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரணாப் முகர்ஜி, துர்கா பூஜை விழாவில் கலந்து கொள்ள வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். அதற்குள், இன்னும் 2 நாட்களில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் இறந்ததால், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஜெய்ஸ்வால், சுபோத் காந்த் சகாய் பதவிகள் பறிப்பு:

இதேபோல், நிலக்கரிச் சுரங்க ஊழல் புகார்களால் எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுபோத் காந்த் சகாய் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் தெரிகிறது.

English summary
Speculation of an imminent Cabinet reshuffle gained fresh momentum on Tuesday with Prime Minister Manmohan Singh and Congress President Sonia Gandhi meeting President Pranab Mukherjee separately
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X