For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் கொடுத்தே ஆக வேண்டும் - கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அடித்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க வருடத்திற்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொடுத்தே ஆக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி - மானிய விலை சிலிண்டர்கள் ஆண்டுக்கு ஆறு என்பதை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை என்னவாயிற்று?

பதில் - மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஒன்பதாக உயர்த்தப் போவதாக ஏடுகளில் ஒரு செய்தி வந்தது. நாடாளுமன்ற நிலைக் குழு அந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 என்று உயர்த்த வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் மானிய விலை சிலிண்டர்களை உபயோகப் படுத்தும் அடிமட்ட, நடுத்தர வர்க்கத்தினர் அதன் காரணமாக மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய அரசு உணர்ந்து, அரசுக்கு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதன் காரணமாக நிதிச்சுமை ஏற்பட்ட போதிலும், அதனை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு, அடித்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் 900 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கி சமைக்க இயலுமா? எனவே மாதம் ஒரு சிலிண்டர் வீதம் மானிய விலை சிலிண்டர்களை வழங்கியே தீர வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவிட முன் வர வேண்டும்.

கேள்வி - சென்னையில் ஐந்து காவல்துறை மேல் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே?

பதில் - காவல் துறை அதிகாரிகள் மாற்றம் என்பது இந்த ஆட்சியில் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. உதாரணமாக நவம்பர் 3-ந் தேதி 19 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். 5-ஆம் தேதி சென்னை மாநகரில் 15 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டார்கள். காவல் துறையிலே உள்ள மூத்த அதிகாரிகள் எப்போது தங்களுக்கு மாறுதல் வருமோ என்ற எண்ணத்தில் சதாசர்வ காலமும் சந்தேகத்தோடு பணியாற்றுவதால், அவர்களால் முறையாக தங்கள் பணிகளை கவனிக்க முடிவதில்லை.

ராஜபக்சேவின் பேரினவாத சர்வாதிகாரம்

கேள்வி - இலங்கையின் ராஜபக்சே அரசு படிப்படியாக சிங்களப் பேரினவாத சர்வாதிகாரம் எனும் திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?

பதில் - ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை நசுக்குவதற்காக பல்வேறு வகையான போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நடத்தி சர்வதேச அரங்கின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

ராஜபக்சே அரசு தொடர்ந்து சர்வாதிகார திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்ட முடியும் என்றாலும், அண்மையில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பல வழக்குகளில் ராஜபக்சே அரசுக்கு எதிராக தீர்ப்பளித்த இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஷிரானி பண்டார நாயக மீது நாடாளுமன்றத்திலேயே குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக சண்டே-லீடர் பத்திரிகையின் ஆசிரியர் ப்ரெடரிக் ஜான்ஸ் என்பவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே ராஜபக்சே அரசின் சர்வாதிகார அடையாளங்களாகும்.

தர்மபுரி தலித் வீடுகள் தீக்கிரை

கேள்வி - தர்மபுரியில் தலித் வீடுகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறதே?

பதில் - தர்மபுரி மாவட்டத்தில் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நத்தம் தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களைப் பாதுகாத்திட வேண்டுமென்றும், சேலம் சரகக் காவல் துறை மற்றும் காவல் துறைத் துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) ஆகியோரிடம் நேரில் சென்று இருவரும் முறையிட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகும் பாதுகாப்பு தரப்படாததால், இருவரும் ஊருக்குள் வர முடியாமல் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில், இளவரசன், திவ்யா ஆகிய இரண்டு பேரின் பெற்றோரையும் ஊர்ப் பஞ்சாயத்தில் அழைத்து, இருவரையும் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் வாழ விடமாட்டோம் என்றும் ஒரு பிரிவினர் மிரட்டியிருக்கிறார்கள்.

இதனால் வேறு வழியின்றி, திவ்யாவின் தந்தை நாகராஜ் என்பவர், 7-11-2012 அன்று மாலை தற்கொலை செய்து கொண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்படி பிரிவினர் நாகராஜனின் உடலை தருமபுரி திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் வைத்து, போக்குவரத்தைத் தடுத்து, சாலையோரங்களில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தும், தீ மூட்டி எரித்தும் மறியல் செய்திருக்கிறார்கள்.

இதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆதிக்கச் சக்தியினர் நத்தம் தலித் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார்கள்.

தலித் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறியதைப் பயன்படுத்தி அண்ணா நகர் தலித் காலனி மற்றும் கொண்டலம்பட்டி தலித் காலனிக்குள்ளும் நுழைந்து அனைத்து வீடுகளையும் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்துள்ளார்கள்.

அதிர்ச்சியிலும் அதிர்ச்சி

இவ்வளவு சம்பவங்கள் நடைபெறும் வரை, அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் அங்கே அரசு நிர்வாகமோ, காவல் துறையோ தலையிடவில்லை என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்ச்சியாகும்.

போலீசார் ஏன் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.ஐ.யான ஆல்வின், சாதிக் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடம் பயத்தை உருவாக்கிவிட்டது என்றும், அதனால் கலவரம் நடந்தபோது தங்கள் உயிருக்குப் பயந்த போலீசார் ஒதுங்கிக் கொண்டனர் என்றும், மேலும், தர்மபுரி எஸ்.பி.யான ஆஸ்ரா கார்க், பரமக்குடி, மதுரை என கடந்த ஒரு வாரமாக டெபுடேஷன் பணியில் இருந்தார் என்றும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போலீசாரும் திட்டமிட்டுச் செயல்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதலுக்கு ஆளான தலித் மக்களை அரூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினர் பி. டில்லிபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். 250 வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள், வண்டிகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் இருந்த பீரோக்களை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு அதன் பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.

3 நாட்களாக அமைதி காத்த அரசு

மூன்று நாட்களாக அங்கே அமைதி ஏற்படவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் தருமபுரி வன்முறையில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் போவதாக முதவ்வர் அறிவித்திருக்கிறார்.

இதற்குக் காரணமானவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களுக்கு மீண்டும் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
There is no other way, but give 12 gas cyliners per year to households, urged DMK president Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X