மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்த மத்திய தொல்லியல் துறை திட்டம்-வைகோ எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம், மாமல்லபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், பல்லவபுரம், திருநீர்மலை, சதுரங்கப்பட்டினம், தாம்பரம், திரிசூலம், திருவிடந்தை, திருமுக்கூடல், மணிமங்கலம், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை போன்ற சிறிய, பெரிய நகரங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டன. இப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் பூர்வீக மண்ணில் புதிய வீடு கட்டவோ, பழைய வீட்டைப் புதுப்பிக்கவோ புதிய மின் இணைப்புப் பெறவோ, விடுபட்ட பகுதிகளுக்கு பட்டா பெறவோ முடியாத அளவிற்கு மத்திய தொல்லியல் துறை ஆட்சேபணை செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கு மாநில சுயாட்சிக்குக் கேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய தொல்லியல் துறை கொண்டு வந்துள்ள 2010ம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத்தால் தமிழ்நாட்டில் சுமார் 450 புராதனச் சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 இடங்களைத் தேர்வு செய்து மத்திய அரசு அரசிதழில் பிரசுரித்துள்ளது.

இதில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், பல்லவபுரம், திருநீர்மலை, சதுரங்கப்பட்டினம், தாம்பரம், திரிசூலம், திருவிடந்தை, திருமுக்கூடல், மணிமங்கலம், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை போன்ற சிறிய, பெரிய நகரங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டன.

எனவே தான் இப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் பூர்வீக மண்ணில் புதிய வீடு கட்டவோ, பழைய வீட்டைப் புதுப்பிக்கவோ புதிய மின் இணைப்புப் பெறவோ, விடுபட்ட பகுதிகளுக்கு பட்டா பெறவோ முடியாத அளவிற்கு மத்திய தொல்லியல் துறை ஆட்சேபணை செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கு மாநில சுயாட்சிக்குக் கேடு.

மத்திய தொல்லியல் துறையின் ஆட்சேபணையை மீறி வீடு கட்டினால் அதை இடித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்க்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். 2010 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையின் சட்டத்தால் தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு அகதிகளாக இடம் பெயர நேரிடும்.

நீதிமன்றத்தின் மூலமாக நிவாரணம் பெற முடியாத சர்வாதிகார சட்டத்தை அமல்படுத்தாமல் உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி 17.8.2012 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டேன். இம்மண்ணில் தொன்மையான வரலாற்றைப் பாதுகாத்திட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மத்திய தொல்லியல்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பு, கண்ணை இமை காப்பது போன்று பாதுகாத்தவர்கள் அப்பகுதியில் வாழும் மக்களே. ஒரு சில தொல்லியல் துறை ஊழியர்களால் மட்டும் பாதுகாக்கப்படவில்லை என்பதனை மத்திய அரசு உணர வேண்டும்.

மத்திய தொல்லியல்துறை வழிபாட்டு இடங்களுக்கும், கலைச் சிற்பங்களுக்கும், கல்லறைகளுக்கும் ஒரே அளவுகோல் கொண்டு 2010ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தினை அறியாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி சந்தடி சாக்கில் அமளிகளுக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் மத்திய தொல்லியல் துறை தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வந்த மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்த 20.5.2012 அன்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தியிருந்தது.

ஏற்கனவே, 2010ம் ஆண்டு சட்டத்தால் சுதந்திர நாட்டில் வாழ்வதற்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமையைப் பறித்துவிட்டு நாட்டின் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் மக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதைக் கண்டித்து 30.5.2012 அன்றும், 6.8.2012 அன்றும் கண்டன அறிக்கை வெளியிட்டேன்.

தொடர்ந்து, மாமல்லபுரம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கடல் எல்லையின் காவலனாக மதிமுக களம் அமைத்துப் போராடி வருகிறது. ஏனைய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி பின் ஒன்றிணைந்து மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி பல கட்டப் போராட்டங்கள், கருப்புக்கொடி ஏற்றுதல், முழு கடையடைப்பு, தொடர் முழக்கப் போராட்டம், கிழக்குக் கடற்கரை சாலை மறியல், 144 தடை உத்தரவு போடப்பட்ட கடற்கரை அலைவாயில் கோவிலில் விளக்கேற்றும் போராட்டம், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தல், சுதந்திர தினத்தன்று உண்ணாநிலைப் போராட்டம் என்று நடத்தியதற்கு பின்னால், மத்திய தொல்லியல் துறை மக்களின் கருத்து கேட்கும் கண்துடைப்பு கபட நாடகம் நடத்தியது.

ஆனால், இதுநாள் வரை அதன் முடிவு என்னவென்று அறிவிக்கவில்லை. மக்களின் உணர்வுகளுக்கும் அறப்போராட்டத்திற்கும் எள்ளின் முனையளவு கூட மரியாதை அளிக்காத மத்திய தொல்லியல் துறையின் எதேச்சதிகார நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

மாநில உரிமைகளையும், தமிழக நிலப்பரப்பையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசு இதுவரை மக்கள் அறியும்வண்ணம் கருத்து தெரிவிக்காததும், மத்திய தொல்லியல் துறையின் மக்கள் விரோதப் போக்கிற்கும் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காததும் கவலை தருகிறது.

மக்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் பறிக்கின்ற மத்திய தொல்லியல் துறை, நவம்பர் 19 தொடங்கி 25 வரை தொல்லியல் துறை வாரம் என கொண்டாடுவது வெட்கக்கேடு. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய தொல்லியல் துறைக்குக் கொண்டாட்டம் ஒரு கேடா?

இப்போக்கைக் கண்டித்து 21.11.2012 அன்று எனது தலைமையில் மாமல்லபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vaiko opposes central archaeological department's move to bring Mahabalipuram Temple under its control
Please Wait while comments are loading...