For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா உத்தரவுப்படி நடந்து கொள்ள பிரதமர் என்ன அதிமுககாரரா?: விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: அதிமுகவினர் வேண்டுமானால் முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி நடந்து கொள்வார்கள். ஆனால் பிரதமரும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது தொடர்பான விவகாரம் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரியில் போதிய தண்ணீர் வராததால் காவிரி ஆற்றுப் படுகையை சேர்ந்த விவசாயிகள் மிக்க வேதனைக்கு ஆளாகியுள்ளனர். கடன் தொல்லையால் ஒரு சிலர் தற்கொலையிலும் ஈடுபடுகின்றனர். மேலும் டிசம்பர் 31ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் மத்திய அரசால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் வந்துள்ள பத்திரிகை செய்தியில் அந்த முடிவை மாற்றி சட்ட நிபுணர்களை ஆலோசிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நீர் பாசனத் துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஏன் கோடானுகோடி நன்றி?:

இது ''வெந்த புண்ணில் இது வேல் பாய்ச்சுவது போல்'' உள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் சங்கம் என்ற பெயரால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நீர்ப் பாசன வசதி செய்து கொடுத்துள்ள முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி என்று விளம்பரம் வருகிறது.

உண்மையில் இன்று விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தாரே தவிர, உண்மையில் மின்சாரம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஆளும் கட்சி சார்பில் தூண்டி விட்டு விவசாயிகள் பெயரால் முதலமைச்சரை பாராட்டி விளம்பரப்படுத்துவது என்ன நியாயம்? மேலும் இதை கர்நாடக அரசும், விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்களா? இது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாமா?.

மணி அடிக்காமல் வேறு என்ன செய்வது?:

டெல்லியில் நடந்த அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொண்ட தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா தனக்கு 10 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி வெளிநடப்பு செய்துள்ளார். பிறகு அவர் அளித்த பேட்டியில் இது தனக்கு இழைத்த அவமானம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கே இழைக்கப்பட்ட அவமானம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டங்களில் கலந்து கொள்வதும், அவற்றில் பேச நேரம் ஒதுக்குவதும், ஒழுங்குகளை கடைப்பிடிப்பதும் அவருக்கு தெரியாதது அல்ல. முன்கூட்டியே முதலமைச்சர்களுக்கு 10 நிமிடம் பேசுவதற்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது என்பதும், அவரது பேச்சு முழு விவரமும் புத்தக வடிவில் தரப்படுவதால் அது பேசப்பட்டதாக கருதி முழுவதையும் தேசிய வளர்ச்சி மன்ற குழுவின் குறிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதும் அவருக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் எந்த அவமானமும் நேரிடவில்லை...

அப்படி இருந்தும் அவர் பேசுகிறபோது 10 நிமிடம் முடிந்து விட்டது என்று தெரிவிக்கும் வகையில் மணி அடிக்காமல் வேறு என்ன செய்வது? மேலும் நேரம் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்று பேசியிருக்கலாம். அதற்கு பதிலாக மணி அடித்தவுடனே கோபப்பட்டு வெளியேறி இருக்கிறார் என்பதுதான் உண்மை. இதனால் யாருக்கும் எந்த அவமானமும் நேரிடவில்லை.

உண்மையில் தமிழ்நாட்டிற்கு டெல்லியிடம் இருந்து பெற வேண்டிய கோரிக்கைகளை மேலும் நேரம் கேட்டு பேசி இருந்தால் மத்திய அரசு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய நல்ல வாய்ப்பை தமிழக முதல்வரின் செய்கையால் இழந்து விட்டது என்பதே வருத்தத்துக்கு உரியதாகும்.

தமிழக சட்டமன்றத்தில் மணியடித்து உட்கார சொல்வதில்லையா?:

குறித்த நேரத்தில் பேசி முடிக்க வேண்டும் என்பது தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கடைப்பிடிக்கும் முறைதான். அதற்காக மணி அடிப்பதும் உண்டு. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தங்கள் கருத்துகளை தெரிவிக்க விடாமல், அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே மணியடித்து உட்கார சொல்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது ஆகாதா என்று மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா?

மேலும் கட்சிகள் நடத்தும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் கூட பேசுபவர்களை முடித்துக் கொள்ள மணி அடிப்பது இயல்பு. முதல்வர் ஜெயலலிதா நடத்தும் அதிமுக செயற்குழுவும், பொதுக்குழுவும் விதி விலக்கல்ல.

முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படியும், விருப்பப்படியும் அதிமுககவினர் நடந்து கொள்ளலாம். ஆனால் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்களும், ஏனைய மாநில முதல்வர்களும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? என்று கேட்டுள்ளார் கேப்டன்.

English summary
Is PM a ADMK cadre to follow Jayalalithaa's orders? asked DMDK leader Vijaykanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X