For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ் மதுரையில் நுழைய விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது: ஹைகோர்ட் அதிரடி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைய கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகக் கூறி அவர் மதுரை மாவட்டத்திற்குள் நுழைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தடை விதித்தார். இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான காந்தி வாதாடுகையில் கூறியதாவது,

டாக்டர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தனி மனித உரிமைக்கு எதிரானது. அவர் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கலெக்டர் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளித்த பிறகும் தடை விதித்துள்ளனர். எனவே இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்குமாறு கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினமே அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டரின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ராமதாஸின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் அரசின் பதில் மனுவைப் பார்த்துவிட்டுத் தான் இடைக்காலத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த காஞ்சி வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பட்டுபாண்டியன் தலைமையில் பல்லாவரத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய பாமக துணை பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கி. ஆறுமுகம் கூறுகையில்,

அனைத்து சாதியினரும் அமைதியாக வாழ டாக்டர் ராமதாஸ் கூறும் அறிவுரைகளை சிலர் வேண்டும் என்றே திரித்து சொல்கின்றனர். அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக வாழவே அவர் பாடுபடுகிறார். அதனால் மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இந்த தடை உத்தரவில் உள்நோக்கம் உள்ளது.

வரும் பிப்ரவரி 6ம் தேதி அனைத்து சாதி சங்கங்கள் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.

மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் பெறக் கோரியும், அவரை கண்டித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
According to PMK, its founder Ramadoss who is accused of kindling caste rivalry is actually struggling for the unity of all castes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X