For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக மின் திட்டங்களுக்காக தமிழக விளைநிலங்களை பாழாக்குவதா? ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக மின் திட்டங்களுக்காக தமிழகத்தில் உள்ள விளை நிலங்களை பாழாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடகத் தலைநகரமான பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய்பாதையை திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களிலுள்ள வேளாண் விளைநிலங்கள் வழியாக அமைக்க கெயில்(GAIL) நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண் விளைநிலங்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் கடந்த சில நாட்களாக தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. ஈரோடு, தருமபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகளை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல் துறையினர் தடியடி நடத்தியும், அச்சுறுத்தியும் விரட்டியடித்துள்ளனர். அது மட்டுமின்றி, போராட்டத்தை முன்னின்று நடத்திய சில விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

எரிவாயுக்குழாய் பதிக்கப்படும் பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் நிலையில், குழாய் பதிப்பதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்காக ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரையே இழப்பீடு வழங்கப்படும் என்று கெயில் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உழவர்களை கட்டாயப்படுத்தி எரிவாயுக்குழாய்களை பதிக்கக் கூடாது. முடிந்தால் வேளாண் நிலங்களுக்குப் பதில் மாற்றுப்பாதைகளில் குழாய்களை புதைப்பது குறித்து அரசு ஆராய வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட 7 மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. ஆனால் இதில் எதையும் செய்யாமல் அடக்குமுறையை பயன்படுத்தி விளைநிலங்களில் எரிவாயுக் குழாய்களை புதைக்க கெயில் நிறுவனம் முயல்வதும், அதற்கு தமிழக அரசு துணை போவதும் முறையல்ல.

எரிவாயுக் குழாய் புதைக்கும் திட்டத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் போதிலும், மிகவும் முக்கியமான காரணம் கர்நாடக மாநிலத்திலுள்ள தாவணகரே, கடாக், முண்டார்கி ஆகிய இடங்களில் கர்நாடக அரசு சார்பில் அமைக்கப்படவுள்ள தலா 700 மெகாவாட் திறன் கொண்ட எரிவாயு அடிப்படையிலான 3 மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தடையின்றி இயற்கை எரிவாயு அளிப்பது தான். இந்தத் திட்டத்திற்காக தமிழக விவசாயிகளின் விளைநிலங்கள் பாழடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மட்டுமின்றி, வேளாண் நிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்டால் பயிர்களின் விளைச்சல் குறைவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, எரிவாயுக்குழாய்கள் வெடித்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதம் போன்றவை ஏற்படக்கூடும்.

எனவே, வேளான் விளைநிலங்களில் எரிவாயுக்குழாய்களை புதைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக கேரளாவில் செயல்படுத்தப்படுவதைப் போல நெடுஞ்சாலை ஓரங்களிலும், சாத்தியமான இடங்களில் ஆற்றுப்படுகைகளிலும் குழாய்ப்பாதைகளை அமைப்பது உள்ளிட்ட மாற்றுவழிகளை ஆராய வேண்டும்; இதற்காக உழவர் சங்கங்களின் நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss told that it is not fair to spoil the agricultural lands in Tamil Nadu for the power projects in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X