For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல்.. இல்லாத சாப்ட்வேர் நிறுவனம்.. செய்யாத வேலைக்கு ரூ. 140 கோடி!

By Chakra
Google Oneindia Tamil News

Finmeccanica Helicopter
டெல்லி: இத்தாலிய ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழலில் லஞ்சப் பணமான ரூ. 470 கோடியில் ரூ. 140 கோடி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேருக்காக வழங்கப்பட்டது என்று கணக்கில் காட்டப்பட்டுத் தான் இடைத் தரகர்களுக்கு தரப்பட்டுள்ளது.

ஆனால், இதற்காக இத்தாலிய நிறுவனம் இந்தியாவில் உள்ளதாகக் காட்டிய சாப்ட்வேர் நிறுவனமான IDS India, உண்மையில் இல்லவே இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் இல்லாத ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தைக் காட்டி, அதற்கு ரூ. 140 கோடி வழங்கப்பட்டதாக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனம் கணக்குக் காட்டியுள்ளது.

இத்தாலியின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து ரூ. 3,546 கோடியில் 12 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படை வாங்கியது. இதில் ரூ. 470 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியுள்ளது.

முன்னாள் இந்திய விமானப் படைத் தளபதியான எஸ்.பி.தியாகியின் 3 உறவினர்களான ஜூலி, டோஸ்கோ, சந்தீப் தியாகி ஆகியோருக்கும், தியாகியின் உறவினர்களுக்கு நெருக்கமான அமெரிக்கரான குய்டோ ரால்ப் ஹஸ்சேக் மற்றும் கார்லோ கெராஸா ஆகியோருக்கும் இந்த லஞ்சம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.

இந்தப் பணம் 2010ம் ஆண்டு பின்மெக்கானிகாவின் இங்கிலாந்து துணை நிறுவனம் மூலமாக இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை துனீசியா நாட்டின் ஒரு வங்கி மூலமாக தந்துள்ளது பின்மெக்கானிகா.

இந்த ஹெலிகாப்டர்களுக்கான சில சாப்ட்வேர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணம் என்ற பெயரில் இந்தப் பணத்தை பின்மெக்கானிகா இவர்களுக்குத் தந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐடிஎஸ் துனீசியா என்ற நிறுவனத்தின் மூலமாக ஐடிஎஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பல கட்டங்களாக இந்த ரூ. 140 கோடி வந்து சேர்ந்துள்ளது. ஹெலிகாப்டர்களுக்கான சாப்ட்வேரை இந்த நிறுவனம் தயாரித்துத் தந்ததாகக் கூறி, இந்த பணப் பரிமாற்றத்தைக் காட்டியுள்ளது இத்தாலிய நிறுவனம்.

இந்த நிறுவனம் டெல்லியில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரில் பல போலி பில்களும் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

அப்படி ஒரு நிறுவனமே இல்லை:

ஆனால், மத்திய கார்பரேட் துறையின் பட்டியலிலும் ஆவணங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் டெல்லி முகவரியில் IDS India என்ற ஒரு நிறுவனமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பெயரை ஒட்டி வேறு சில சாப்ட்வேர் நிறுவனங்கள் இருந்தாலும், இத்தாலிய நிறுவனம் சொன்ன முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை.

இதனால், லஞ்சத்தை இடம் மாற்றுவதற்காக போலியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர் இத்தாலிய, இந்திய இடைத்தரகர்கள்.

இல்லாத நிறுவனத்துடன் Aeromatrix 'வர்த்தகத் தொடர்பு':

அதே நேரத்தில் இந்த IDS India நிறுவனத்துடன் சண்டீகரைச் சேர்ந்த IDS Infotech, Aeromatrix ஆகிய நிறுவனங்கள் 'வர்த்தகத் தொடர்புகளில்' இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இல்லாத ஒரு நிறுவனத்துடன் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட 'வர்த்தகத் தொடர்புகளில்' இருந்த Aeromatrix நிறுவனத்தை நடத்தி வருவது குய்டோ ஹாஸ்க்கே, கார்லோ கெரோசா மற்றும் மூத்த வழக்கறிஞரான கெளதம் கெய்தான் ஆகியோர்.

இதில் குய்டோ ஹாஸ்க்கே, கார்லோ கெரோசா ஆகியோர் தான் இத்தாலிய நிறுவனத்தின் முக்கிய இடைத் தரகர்கள் என்பதும், இவர்கள் சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருப்பதும், இவர்களை கைது செய்ய இத்தாலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கெய்தானுக்கும் ஊழலில் தொடர்பு:

இதனால் இந்தியாவில் லஞ்சப் பணத்தை வாங்கி பரிமாறியதில் கெளதம் கெய்தானுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. கெய்தானும் ஒரு இடைத்தரகராக செயல்பட்டதாக இத்தாலிய அரசு அந் நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதே போல இந்தியாவைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் தியாகி உள்ளிட்ட 15 பேர் இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து லஞ்சம் வாங்கியுள்ளதாக இத்தாலிய அரசு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் Zappa என்ற நபரும் அடக்கம். அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

English summary
The company at the centre of the Agusta Westland VVIP helicopter scandal, IDS India, does not appear to exist in any official database. As reported by TOI on February 14, this is the 'company' which received up to Rs 140 crore in kickbacks in the 2010 VVIP helicopter deal with AgustaWestland via the tax haven of Tunisia over a period of about five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X