For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரமோஷனைக் காணோம்... மாஸ் லீவு போட்டு வீட்டுக்குப் போக 70 டி.எஸ்.பிக்கள் முடிவு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பதவி உயர்வு வழங்கப்படாத காரணத்தால் 70 டி.எஸ்.பிக்கள் வரை மொத்தமாக விடுமுறையில் செல்ல முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போலீஸ் அதிகாரிக்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போலீசில் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஒவ்வொரு ஆண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

1979ம் ஆண்டு பணியில் சேர்ந்து, தற்போது டிஎஸ்பிக்களாக உள்ள 70 பேர் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுகின்றனர். குறிப்பாக 40க்கும் மேற்பட்டவர்கள், மே மாதம் ஓய்வு பெறுகின்றனர். இதனால், பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து வரும் 3ம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஆலோசனை நடத்த வரும்படி, பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததால், இது குறித்து ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து பதவி உயர்வு பட்டியலில் உள்ள டிஎஸ்பி ஒருவர் கூறும்போது, நாங்கள் 1979ம் ஆண்டு எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்தோம். 14 ஆண்டுகள் எஸ்.ஐ.யாகவும், 13 ஆண்டுகள் இன்ஸ்பெக்டர்களாகவும், 8 ஆண்டுகள் டிஎஸ்பிக்களாகவும் உள்ளோம். இதுவரை 2 பதவி உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் 1979ம் ஆண்டு ஏஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் டிஜிபிக்களாக உள்ளனர். சிலர் டிஜிபி பதவிக்கு பின் ஓய்வும் பெற்று விட்டார்கள். அவர்களுக்கு 5 பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதனால்தான், நாங்கள் 3ம் தேதி சென்னையில் கூடி முடிவு எடுக்க உள்ளோம். முதல்வருக்கும் எங்களது குறைகளை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். குறிப்பாக மொத்தமாக விடுமுறை எடுக்கலாமா என்றும் ஆலோசனை நடத்தி வருகிறோம்'' என்றார்.

கூடுதல் எஸ்.பியாக உயர்வு

டிஎஸ்பிக்களாக உள்ளவர்களுக்கு கூடுதல் எஸ்பி பதவி உயர்வு வழங்க வேண்டும். 2 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது 1979ம் ஆண்டு எஸ்.ஐ. ஆக பணியில் சேர்ந்தவர்கள் 102 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றிய சிலர் தங்களையும் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரு பதவி உயர்வுதான் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று 1987ம் ஆண்டு எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருப்பதால், கூடுதல் எஸ்பி பதவிகளை நிரப்பக் கூடாது என்று வீரப்பன் அதிரடிப்படையில் உள்ள சில அதிகாரிகள் உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர். அதனால் உள்துறை அதிகாரிகள் பதவி உயர்வு பட்டியலை தூக்கி வைத்து விட்டனர்.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பதவி உயர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஒரு ஐஏஎஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்தான் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்ற வழக்கிற்கும் இந்த பதவி உயர்வுக்கும் சம்பந்தம் இல்லை. முதல்வர் உத்தரவிட்டால் பதவி உயர்வு வழங்கலாம் என்று டிஜிபி ராமானுஜம் கூறியதாகவும் தெரிகிறது. இதனால், பதவி உயர்வு குறித்து பின்னர் ஒருநாள் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியதாக கூறப்படுகிறது.

பதவி உயர்வு அறிவிப்பு வெளியாகுமா? அல்லது மொத்தமாக லீவில் செல்வார்களா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

English summary
70 DSPs who are waiting for promotion for long time have decided to go on leave enmasse to express their anger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X