For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு புதிதாக 12 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆண்டு புதிதாக 12 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கம்ப்படும் என இன்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மாநிலத்தின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்கும் மனித வள மேம்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது உயர் கல்வி. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த உயர் கல்வியை நம் நாட்டிலுள்ள அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, எவ்வித வசதியுமின்றி செயல்பட்டு வந்த ஐந்து அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் எனது தலைமையிலான அரசு கொண்டு வந்தது.

இது மட்டுமல்லாமல், கல்வி தொடர்பான விவரங்களை தங்களது கல்லூரிக்கு அருகில் இருந்து பெற்றுக் கொள்ள வசதியாகவும், கல்லூரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வசதியாகவும் திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாநகராட்சிகளில் மண்டல மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல அலுவலகங்களுக்கான கல்வி சார்ந்த கட்டடங்கள் தலா 30 கோடி ரூபாய் செலவிலும், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மண்டல மையங்களில் மாணவ மாணவியருக்கான விடுதிக் கட்டிடங்கள் தலா 10 கோடி ரூபாய் செலவிலும், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் மாணவ - மாணவியருக்கான விடுதிக் கட்டடங்கள் தலா 10 கோடி ரூபாய் செலவிலும், பட்டுக்கோட்டை மற்றும் பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் விடுதிக் கட்டடங்கள் தலா 5 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டு உறுப்புக் கல்லூரிகளுக்கும் மின் வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் பிற வசதிகள் 10 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தித் தரப்படும். மொத்தத்தில் மேற்காணும் பணிகளுக்காக 150 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் தற்கால சூழ்நிலைக்கும் பொருத்தமாக விளங்குவதைக் கருத்தில் கொண்டு, சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய ஒன்பது பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் செலவில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம், சுவாமி விவேகானந்தரின் போதனைகளான தேச பக்தி, ஒழுக்கம், கண்ணியம், அறிவாற்றல், மத சகிப்புத்தன்மை ஆகியவை மாணவ- மாணவியரிடமும், பொதுமக்களிடமும் எடுத்துச் செல்லப்படும். புதிதாக கல்லூரிகள் துவங்குவதைப் பொறுத்த வரையில், மூன்று அரசு பொறியியல் கல்லூரிகள், 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 10 அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் என எனது தலைமையிலான அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, ஒரு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுவிட்டன. இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் விரைவில் செயல்படத் துவங்கும்.

இது மட்டுமல்லாமல், 2013-2014-ம் கல்வி ஆண்டிலிருந்து மேலும் எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இது இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெற்றிருக்கிறது. இது தவிர, மேலும் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டிலிருந்து துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்பட்டி; ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் திருவாடானை; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஆக மொத்தம் 12 கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும்.

இது தவிர, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததைக் கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஒரு அரசு பொறியியல் கல்லூரியும்; திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரில் ஒரு அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னேற்றம் அடையவும், இதன் மூலம் தமிழக மக்கள் அனைத்துச் செல்வங்களையும் பெற்று பெருமையும், புகழும் அடையவும் வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English summary
In Tamilnadu assembly today cheif minister Jayalalitha announce 12 new colleges for Tamilnadu. The 12 new colleges will be in set up in different places of Tamilnadu including Sivakasi,Kovilpatti, Kadaladi and many other.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X