For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பஸ்களில் ரூ.10க்கு ‘அம்மா மினரல் வாட்டர்’: ஜெயலலிதா அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Mineral water
சென்னை: அரசு பஸ்களில் இனி 10 ரூபாய்க்கு மினரல் வாட்டர் விற்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கு ‘அம்மா மினரல் வாட்டர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுற்று, பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே செல்வதன் விளைவாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் செய்வதறியாது விழி பிதுங்கி, இதனை எதிர்கொள்ள வழி தெரியாத சூழ்நிலையில், விலைவாசி என்னும் கொடூரத்திலிருந்து மக்களை காக்கும் வகையில், தமிழக மக்களை வாழவைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி; அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக வெளிச்சந்தையில் 20 ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசி; சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், உளுத்தம்பருப்பு 30 ரூபாய்க்கும் வழங்குதல்;

விவசாயிகளின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக 50 ரூபாய், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக 70 ரூபாய்; ஏழை, எளிய தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி அறவே ரத்து;

ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் வயிறார உண்ணும் வகையில் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் அம்மா உணவகங்கள்; காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் என பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையங்களை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ‘மினரல் வாட்டர்' குடிநீர் தயாரிக்கும் வகையில், ‘அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். ‘மினரல் வாட்டர்' தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும்.

இந்த நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் திறன் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.

ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசுப் போக்குவரத்து கழக நிறுவனங்களினால் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

இந்த ‘அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று துவங்கி வைக்கப்பட்டு விற்பனையும் அன்றைய தினமே துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைத் தொடர்ந்து மேலும் 9 இடங்களில் ‘அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

English summary
TN CM Jayalalithaa has announced the launch of subsidised drinking water for bus passengers. It will be called 'Amma mineral water'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X