For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்க தடை: ஆய்வு குழு அமைப்பு... ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

TN govt. bans methane extraction from Cauvery
சென்னை: காவேரி டெல்டா பகுதி நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தற்போது செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (17ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, உற்பத்தி செய்ய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாகவும்; இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதியில் மண் வளம் வெகுவாக பாதிக்கும் என்றும்; நிலத்தடி நீர் குறையும் என்றும்; விளைநிலம் உப்பளமாக மாறிவிடும் என்றும்; மீத்தேன் வாயு நச்சுத் தன்மை வாய்ந்ததால், வாயு கசிவு ஏற்பட்டால் பல்வேறு கொடிய நோய்களுக்கு மக்கள் ஆட்படுத்தப்படுவார்கள் என்றும், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இது குறித்த விவரங்களையும், இது தொடர்பான கோப்புகளையும் வரவழைத்துப் பார்த்து, அரசு அதிகாரிகளுடன் விவாதித்தேன்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியினை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்தது.

இது தொடர்பாக மேற்படி நிறுவனத்துடன் 29.7.2010 அன்று மத்திய அரசு ‘உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம்' ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனம் ஆய்வு மற்றும் உற்பத்தியை துவங்குவதற்கு ஏதுவாக பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேற்படி நிறுவனமும், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 50 கிராமங்களை உள்ளடக்கிய 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியில் ஆய்வு மற்றும் உற்பத்தியை துவங்க ஏதுவாக பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கோரி தமிழக அரசுக்கு 28.10.2010 அன்று விண்ணப்பித்தது. இதனைப் பரிசீலித்த முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் ஆணையை 1.1.2011 அன்று வழங்கியது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 4.1.2011 அன்று மேற்படி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்படுத்திக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தில், இந்தத் திட்டத்திற்குத் தேவையான உரிமங்களை பல்வேறு துறைகளிலிருந்து பெறுவதற்கும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும், குழாய்கள் பதிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும் உரிய உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 29.12.2011 அன்றும், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 23.1.2012 அன்றும் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் விவசாயிகள் சார்பில் எழுப்பப்பட்டன.

இந்தக் கூட்டங்களில் விவசாயிகளின் கருத்துகள் மற்றும் ஐயங்கள் உட்பட அனைத்து விவரங்களும் முழுமையாக, வார்த்தை பிறழாமல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும், விவசாயிகளால் எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு விளக்கங்கள் எதையும் அளிக்காமல், ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய சுற்றுச்சூழல் அனுமதியை திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தனது 12.9.2012 நாளிட்ட கடிதம் மூலம் வழங்கியது.

மேற்படி நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அனுமதி அளித்திருந்தாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வுப் பணிகளை துவங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும். திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரியதற்கான அனுமதி இன்னமும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் நிலக்கரி படுகையிலிருந்து மீத்தேன் எரிவாயு எடுக்க உத்தேசித்துள்ள டெல்டா பகுதிகள், அமெரிக்காவின் வயோமிங் மற்றும் மோன்டானா மாநிலங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கப்படும் பவுடர் ரிவர் பேசின் பகுதியின் நில அமைப்புகளுடன் ஒத்துள்ளது என்று மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பவுடர் ரிவர் பேசின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அறிக்கையில், நிலக்கரி படுகை மீத்தேனிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரில் அதிக அளவு சோடியம் இருப்பதாகவும்; அது மண் வளத்தை வெகுவாக பாதிக்கிறது என்றும்; குடிதண்ணீர் கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என்றும்; நிலக்கரி படுகையை ஒட்டியுள்ள ஆர்ட்டீசியன் நிரூற்றுகள் மறைந்து போய்விட்டன என்றும்; நீரோட்டம் 200 அடி அளவுக்கு கீழே இறங்கிவிட்டது என்றும்; நீரோட்டத் தண்ணீர் மாசடைந்துவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று மற்றொரு அறிக்கையில், நிலக்கரி படுகை மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களில் சில, நச்சுத் தன்மை உடையதாகவும், தண்ணீரில் கரையக் கூடியதாகவும், கதிரியக்கம் கொண்டதாகவும் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவேரி டெல்டா கடலோர மாவட்டங்களில் பருவநிலை மாறுதல்களின் காரணமாக இன்னமும் 40 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து, அதன் காரணமாக உப்பு நீர் உட்புகுந்து, விளை நிலங்கள் பாதிப்படைந்து, நிலத்தடி நீரின் உவர்ப்புத் தன்மை அதிகரித்துவிடும் நிலைமை உள்ளதால், இந்த பாதிப்புகளிலிருந்து காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாப்பதற்காக 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசிய வங்கி கடன் உதவியுடன் ஐந்தாண்டுகளில் ஒரு திட்டத்தினை நிறைவேற்ற எனது அரசு அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ள சூழ்நிலையில், நிலக்கரி படுகை மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து விவசாயிகள் பல்வேறு ஐயங்களை தெரிவித்துள்ள நிலையில், ஆய்வு அறிக்கைகளும் விவசாயிகளின் கருத்துகளுக்கு வலு சேர்ப்பதாக இருக்கின்ற சூழ்நிலையில், இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டால் தான், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு திட்டத்தை அனுமதிக்க முடியும்.

தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவேரி டெல்டா பகுதி நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் சிறிதளவு பாதிப்பு ஏற்படும் என்றாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த எனது அரசு அனுமதி அளிக்காது. எனவே, இந்தத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, அதற்கான ஆய்வினை மேற்கொள்ள ஒரு குழுவை அமைத்திட ஆணையிட்டுள்ளேன்.

இந்தக் குழுவில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் இடம் பெறுவர். இந்தக் குழு தனது அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் அளிக்கும்.

மேற்படி குழு தனது அறிக்கையை அளித்து, அதன் அடிப்படையில் அரசு ஒரு முடிவு எடுக்கும் வரை திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் எந்தப் பணியையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J. Jayalalitha permission for extraction of Methane from Cauvery delta districts as it would result in pollution and over exploitation of groundwater.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X