For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தன்னம்பிக்கை வலுப்பெற ஜெ. சொன்ன 'சுண்டெலிக் கதை'

By Mathi
Google Oneindia Tamil News

Jaya's story on self confidence
சென்னை: சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உள்ளத்தில் அச்சமற்ற தன்மை உருவாக்க தன்னம்பிக்கை வலுப்பெற ஞானி- சுண்டெலி கதை ஒன்றை சுவாரசியமாகக் கூறினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கம், மதுரை எம்.எல்.ஏ. போஸ் ஆகியோரது இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொன்ன ஞானி - சுண்டெலி குட்டிக் கதை இது:

கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அதுபோல் சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சிலர் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகி, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.

ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும். இவ்வாறு ஜெயலலிதா குட்டிக் கதையை கூறினார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa told a short story for the Self Confidence in Wedding function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X