நீ கருப்பு வெளியே போ..முடியை இழுத்து தள்ளி! அத்துமீறிய அர்ச்சகர்! கடவுள் என் கணவன்னு பெண் சொன்னாரா?
பெங்களூரூ : கர்நாடக மாநிலத்தில் மதம் சார்ந்த சர்ச்சை நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் ஒருவரை அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளியதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அப்பெண் மீது கோவில் நிர்வாகமும் புகார் அளித்துள்ளது.
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கிறார். மதம் சார்ந்த விவகாரங்களில் அக்கட்சி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப் தொடர்பான பிரச்சனை இந்தியா முழுவதிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது.

பெண் மீது தாக்குதல்
அதற்கு அடுத்ததாக மசூதிகளில் ஒலிபெருக்கி விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆளும் பாஜக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் அவர்கள் மத நம்பிக்கையில் தலையிட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்திராமையா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் கோவிலுக்குள் புகுந்த பெண் ஒருவரை அங்கிருந்து அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் தலைமுடியைப் பிடித்து வெளியே தள்ளியதாக புகார் எழுந்திருக்கிறது.

கோவிலில் பிரச்சினை
அதே நேரத்தில் அந்தப் பெண் கோவில் நிர்வாகிகள் மீது புகார் அளித்திருக்கின்றார். பெங்களூரு அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு வழிபாடு நடத்தச் சென்ற பெண் ஒருவரை அந்த கோவிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி கோவிலில் இருந்து வெளியேற்றியதாக புகார் எழுந்தது.

காவல்நிலையத்தில் புகார்
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியான நிலையில் இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முனிகிருஷ்ணப்பா தன்னிடம் மிக கடுமையாக நடந்து கொண்டதாகவும் குளிக்காமலும் தூய்மையாக இல்லாமலும் கோவிலுக்குள் வரக்கூடாது என்பதோடு நீ கருப்பாய் இருக்கிறாய் உன்னை கோவிலுக்குள் விட முடியாது என்று கூறி அடித்து துன்புறுத்தியதாக கூறி இருந்தார். மேலும் இரும்பு கம்பி கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் கோயில் பூசாரிகள் அவரை தடுத்ததாகவும் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் தன்னையும் தனது கணவரையும் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை
இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் புகார் அளித்த அந்த பெண் கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் என் மீது சாமி வந்துவிட்டது வெங்கடேஸ்வரர் எனது கணவர் சாமியின் அருகில் நான் உட்கார வேண்டும் என சொன்னதாகவும் அவரை பூசாரிகள் விடாததால் அவர்கள் மீது எச்சில் துப்பியதாகவும் தொடர்ந்து எத்தனை முறை எடுத்துக் கூறியும் அவர் கேட்காததாலேயே அவரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருவர் அளித்த புகார்களையும் பெற்றுக் கொண்டுள்ள போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications