ஓமிக்ரான் : பெங்களூரு விமான நிலையத்தில் தப்பிய 10 பேரை தேடும் பணி தீவிரம்
பெங்களூரு : பெங்களூரு விமான நிலையத்தில் கொரோனா டெஸ்ட் எடுத்து விட்டு தலைமறைவான 10 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவான 10 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா டெஸ்ட் எடுத்த பயணிகளில் 10 பேரை காணவில்லை என்றும் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரான் வைரஸ்
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதை அடுத்து பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து ரிஸ்க் நாடுகள் எனக் கூறப்படும் தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு 45 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முடிவுகள் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விமான நிலையத்தில் 10 பேர் மாயம்
இதற்கிடையே கர்நாடகத்தில் ஓமிக்ரான் அறிகுறி உள்ள இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகு மாயமாகி விட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலையத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 10 பேரை அடுத்த 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஓமிக்ரான் மாநிலத்திற்குள் பரவாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பரிசோதனை
இந்தக் கூட்டத்தில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் அசோக் விமான நிலையத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு நெகட்டிவ் என முடிவுகள் வரும் வரை விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்ப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகளில் 66 வயது முதியவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 20ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அவர் 7 நாட்களுக்கு பின்னர் துபாய் சென்றுள்ளார். இதனால் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று 24 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது என குறிப்பிட்டார்.

10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை
மேலும் அதே நேரத்தில் வந்த மற்ற 57 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் வந்தவுடன் அனுப்பப்படுவார்கள். இதில் பரிசோதனை செய்துவிட்டு தப்பிய 10 பேர் தங்களுடைய செல்போனை ஆஃப் செய்துள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications