பெங்களூரில் கம்பெனி சிஇஓ, எம்டியை.. ஆபீஸ் உள்ளேயே வெட்டி கொன்ற "மாஜி" ஊழியர்.. வெளியானது காரணம்
பெங்களூர்: பெங்களூரில் தனது முன்னாள் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரை முன்னாள் ஊழியர் ஒருவர் கும்பலோடு வந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் உள்ள அம்ருதஹள்ளி பகுதியில் இருக்கும் ஏரோனிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Aeronics Media Pvt Ltd) என்ற தனியார் நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது ஒரு இன்டர்நெட் சர்வீஸ் வழங்க கூடிய நிறுவனம் ஆகும். இதன் சிஇஓ சலைன் ஆர் வினு குமார் (40) வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார் .

அவருடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பனீந்திர சுப்ரமணி (36) என்பவரும் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். சிஇஓ சலைன் ஆர் வினு குமார் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர். பனீந்திர சுப்ரமணி பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர்.
இந்த கொலையில் தொடர்புடைய பெலிக்ஸ் என்ற சுபாரிஷ் (27), வினய் ரெட்டி (23), சந்து என்கிற சந்தோஷ் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவரும்தான் அலுவலகம் உள்ளே சென்று சிஇஓ வினு குமாரை வெட்டி உள்ளனர்.
இதை தடுக்க வந்த எம்டி பனீந்திர சுப்ரமணியையும் வெட்டி கொலை செய்துள்ளனர். இரண்டு பேருமே அலுவலகம் உள்ளேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பலியாகி உள்ளனர். இதில் கொலையாளிகளில் ஒருவரான பெலிக்ஸ் என்பவர்தான் Aeronics Media Pvt Ltd நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.
தனது முன்னாள் நிறுவனத்திற்கு உள்ளேயே வந்து இவர் தனது முன்னாள் நிறுவன சிஇஓ மற்றும் எம்டியை கொன்றுள்ளார். இவரின் தலைமையில்தான் அந்த கும்பல் அலுவலகம் உள்ளேயே இந்த கொடூர கொலையை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெலிக்ஸ் தொடங்கி உள்ள புதிய நிறுவனத்திற்கும் அவர் வேலை பார்த்த பழைய நிறுவனத்திற்கும் இடையில் இருக்கும் நிர்வாக போட்டியே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

பெலிக்ஸ் மற்றும் அருண் குமார் அசாத் என்ற இருவரும் இணைந்து Gnet Broadband என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கும் Aeronics Media Pvt Ltd நிறுவனத்திற்கும் இடையே உள்ளே போட்டிதான் இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பெலிக்ஸ் வேலையை விட்டு போன பின் அவர் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து போட்டியாக பழைய நிறுவனம் இருந்துள்ளது.
அவரை வேலை செய்ய விடாமல், அவரின் புதிய நிறுவனத்தை வளர விடாமல் தொடர்ந்து பழைய நிறுவனம் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிர்வாக போட்டியே கொலையாக மாறியதாக கூறப்படுகிறது. பெலிக்ஸ் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்த்தவர் என்பதால் உள்ளே எப்படி செல்ல வேண்டும், எங்கே சிஇஓ இருப்பார் என்பதை எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு எளிதாக உள்ளே சென்று கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தெரிந்து டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்த அருண் குமார் அசாத் குமாரையும் போலீசார் பெங்களூர் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications