சர்ப்ரைஸ் தந்த காதலி.. கதறிய காதலன்.. பெங்களூரு "இன்ப அதிர்ச்சி" கேஸில் திடுக்கிடும் பின்னணி அப்டேட்
பெங்களூர்: காதலனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாகக் கூறி, அவரது கை, கால்களை நாற்காலியில் கட்டி வைத்து, உயிருடன் எரித்துக் கொன்ற காதலியின் செயல் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வருவதால், இதுகுறித்து காவல்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியைச் சேர்ந்தவர் கிரண் (27).. இவர் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிம் கார்டு விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.. அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரேமா (24) என்பவருடன் கிரணுக்கு கடந்த 2 ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது..

பெங்களூர் காதலி இன்ப அதிர்ச்சி
சமீபகாலமாக கிரண் தன்னுடன் சரியாகப் பேசுவதில்லை என்றும், தன்னை விட்டு விலகிச் செல்வதாகவும் பிரேமா சந்தேகமடைந்துள்ளார்.. இதனால் அவருக்குத் தக்க பாடம் புகட்டத் திட்டமிட்ட பிரேமா, நேற்று முன்தினம் தனது அம்மாவும், சகோதரனும் வேலைக்கு சென்ற பிறகு, அஞ்சனாநகரில் உள்ள தனது வீட்டிற்கு கிரணை வரவழைத்துள்ளார்.
அங்கு வந்த கிரணிடம், ஃபாரீன் ஸ்டைலில், தனது காதலைப் புதுப்பிக்க போவதாக சொன்னார். உடனே ஒரு நாற்காலியில் காதலனை அமர வைத்துள்ளார்.. பிறகு கிரணின் கண்கள், கைகள் மற்றும் கால்களைக் கயிற்றால் இறுக்கமாகக் கட்டியுள்ளார்..
நாற்காலியில் இறுக்கமாக கட்டுகிறாயே
ஏன் இவ்வளவு இறுக்கமாகக் கட்டுகிறாய் என கிரண் கேட்டபோது, இது ஒரு சர்ப்ரைஸ் விளையாட்டு என்று கூறி பிரேமா அவரை நம்ப வைத்துள்ளார்.. கிரண் முழுமையாகக் கட்டப்பட்டதை உறுதி செய்த பிரேமா, திடீரென அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார்.. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் கிரண் அலறித் துடித்துள்ளார்.
இதன் உச்சக்கட்டமாக, பிரேமா தனது செல்போனில் கிரண் தீயில் கருகுவதை சிறிதும் இரக்கமில்லாமல் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.. கிரணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்..
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
தகவலறிந்து வந்த அஞ்சனாநகர் போலீசார், கிரணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. போலீசாரிடம் முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய பிரேமா, தான் பாத்ரூம் சென்றிருந்தபோது, கிரண் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார்..
எனினும் அவரது பேச்சை நம்பாத போலீசார், கிரணின் செல்போனை சோதனையிட்டனர்.. அப்போது கிரண் எரிக்கப்படும் வீடியோ இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.. இதையடுத்து பிரேமாவைக் கைது செய்த போலீசார், இந்த கொடூரக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இன்ப அதிர்ச்சி என்ற பெயரில் நடந்த இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஆனால், காதலன் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து டிசிபி நாகேஷ் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.
போலீஸ் அதிகாரி விளக்கம்
சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாகப் போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த அவர், மக்கள் கூட்டம் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்..
தொடர்ந்து இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போலீஸ் அதிகாரி நாகேஷ், "இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சில தொடக்கக் கட்டத் தகவல்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. விசாரணை முடிந்த பிறகே முழு உண்மை நிலவரம் தெரியவரும்.
சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்துப் பரவி வரும் தகவல்களில் பல தவறான செய்திகள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமாகத் தரப்படும் அறிவிப்புகளை மட்டுமே மக்கள் கவனிக்க வேண்டும். சம்பவ இடத்தில் தற்போது நிலைமை சீராக உள்ளது.. எந்தவித அச்சமும் தேவையில்லை.
குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என தன்னுடைய அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்..












Click it and Unblock the Notifications