போலீஸ் உடையில் வீடியோ காலில் மனைவியிடம் கொஞ்சிய திருடன்.. கான்ஸ்டபிளுக்கு வந்த பிரச்சனை.. போச்சே
பெங்களூர்: பெங்களூரில் திருட்டு வழக்கில் கைதான இளைஞர் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது போலீஸ்காரரின் உடை, தொப்பி அணிந்து மனைவிக்கு வீடியோ கால் செய்து பேசினார். அதனை அவர் ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்த நிலையில் அவருக்கு போலீஸ் உடை வழங்கிய போலீஸ்காரர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
‛கூடா நட்பு கேடு தரும்'.. என்பது பழமொழி.. அதன் அர்த்தம் என்னவென்றால் தவறான நபர்களுடன் நட்பாக இருப்பது ஒருவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது தான். அப்படி போலீஸ்காரர் ஒருவர் திருட்டு வழக்கில் கைதானவருடன் நட்பாக பழகி இப்போது சஸ்பெண்ட் ஆகி உள்ளார்.

இந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் சலீம் செய்க். இவருக்கு இன்னொரு பெயர் உள்ளது. அந்த பெயர் பாம்பே சலீம். இவர் மீது மட்டும் 50க்கும் அதிகமான திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பெங்களூர் இந்திரா நகர் போலீசார் சமீபத்தில் சலீம் செய்க்கை கைது செய்தனர். கடந்த ஜுன் மாதம் நடந்த திருட்டு வழக்கில் அவர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபால் செல்போனையும் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அவர் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் செல்போனில் இருந்து பெற நினைத்தனர்.
அப்போது சலீம், போலீஸ் கான்ஸ்டபிள் உடை அணிந்து பெண் ஒருவருடன் வீடியோ கால் பேசியிருக்கும் போட்டோ இருந்தது. சலீம் அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருந்தார். அவர் கர்நாடகா போலீஸ் கான்ஸ்டபிள் அணியும் உடை மற்றும் தொப்பி அணிந்து வீடியோ காலில் பேசியிருந்தார். இதையடுத்து அவருக்கு எப்படி போலீஸ் உடை, தொப்பி கிடைத்தது? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது சலீம் அணிந்திருந்த போலீஸ் உடை கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சொனரே என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு சலீமை திருட்டு வழக்கில் கோவிந்தபுரா போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு திருட்டு நகைகளை மீட்க அவரை போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த வேளையில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த சமயத்தில் கான்ஸ்டபிள் சொனரேவின் போலீஸ் உடை மற்றும் தொப்பியை சலீம் அணிந்து, செல்போனில் தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசி அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருந்தது அம்பலமானது. இதையடுத்து திருடனுக்கு போலீஸ் உடை கொடுத்தது, கஸ்டடியில் இருக்கும் ஒருவருக்கு செல்போன் வழங்கி மனைவியிடம் வீடியோ காலில் பேச வைத்தது உள்ளிட்ட புகாரை தொடர்ந்து போலீஸ் கான்ஸ்டபிள் செனரே அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications