நொடிக்கு நொடி விஞ்ஞானிகள் டென்ஷன்.. "சக்ஸஸ்" செய்த தமிழ்நாடு.. ஆனந்த கண்ணீரில் திளைத்த இந்தியா
பெங்களூர்: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் தருணத்தை, விஞ்ஞானிகள் பெருத்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.. முகத்தில் டென்ஷன் காணப்பட்ட விஞ்ஞானிகளின் முகம், நிலவை விண்கலம் தொட்ட தருணத்தில் மலர்ச்சியாய் பூரித்து காணப்பட்டது.
உலக நாடுகளே இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்து கொண்டிருக்கிறது.. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளின் அபரிமிதமான வளர்ச்சியை பார்த்து, மொத்த பேரும் வாயடைத்து போயுள்ளார்கள்.

இந்த வரலாற்று சாதனையின் ஆணிவேர்கள் விஞ்ஞானிகளே என்பதை மறுக்க முடியா.. இந்த விஞ்ஞானிகளின் வரிசையில் நம்முடைய தமிழர்களின் பங்கு அபரிமிதமாகவே உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம். இந்த சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தொடர்ந்து தமிழர்கள் இருந்து வருவது கூடுதல் சிறப்புக்குரிய அம்சமாகும்.
வீரமுத்துவேல்: உலக அரங்கில் நம்முடைய நாட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும், தனி மரியாதையையும் இந்த சந்திராயன் 3 ஏற்படுத்தி தந்துள்ளது.. இந்த திட்டத்தின் இயக்குனரான வீரமுத்துவேலின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.. இவருக்கான பாராட்டுக்களும் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்கலம் தரையிறங்கும் அந்த கடைசி தருண காட்சிகள் இணையத்தில் வைரலாக ஆரம்பித்துவிட்டது. பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நிலையில், 8 கட்டங்களாக நிலவில் மென்மையாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்ட துவங்கினர். சரியாக 6 மணி அளவில், தரையிறக்கம் பணி ஆரம்பமான நிலையில், கிடைமட்டமாக சுற்றும் லேண்டரை செங்குத்தான கோணத்தில் திருப்பி தரையிறக்கும் பணி தொடங்கியது.

தானியங்கி: பிறகு, தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்க ஆரம்பித்தது.. தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்க துவங்கியது.
இந்த நிமிடங்கள் ஒவ்வொன்றையும் விஞ்ஞானிகள் மிகுந்த பதட்டத்துடனும், பரபரப்புடனும், ஒருவித டென்ஷனுடனும் எதிர்கொண்டபடியே காணப்பட்டனர். விண்கலம் ஒவ்வொரு திசையிலும் நகரும்போதெல்லாம், விஞ்ஞானிகளின் முகமும் விதவிதமாக மாறிக்கொண்டே இருந்தது.. பதற்றமும், ஆர்வமும், எதிர்பார்ப்பும் என மாறி மாறி விஞ்ஞானிகளின் தருணங்கள் கழிய துவங்கின.
சில விஞ்ஞானிகள் கைகளை பிசைந்துகொண்டும், சில விஞ்ஞானிகள் விரல்களை டென்ஷனில் கடித்துக் கொண்டும், பதட்டமாக இருந்தனர். நிலவில் தரையிறங்குதற்கு 1 நிமிடத்துக்கு முன்பேயே கைகளை தட்ட துவங்கிவிட்டனர்.

சாதனை: நிலவை இந்தியா முத்தமிட்ட அந்த கடைசி தருணத்தில், மொத்த விஞ்ஞானிகளும், எழுந்து ஆரவாரமாக கைகளை தட்டி துள்ளி குதித்து மகிழ்ந்தனர்.. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டனர். பெண் விஞ்ஞானிகளின் ஆனந்த கண்ணீர் துளிர்ப்பதை பார்க்க முடிந்தது.. அனைவர் முகத்திலும், சாதித்து காட்டிய பெருமையும், மகிழ்ச்சியும் தென்படுவதை காண முடிந்தது.












Click it and Unblock the Notifications