அடுத்த சி.எம் யார்? பரபரப்புக்கு மத்தியில் ‘ஆன்மீக குரு’வை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற டிகே சிவகுமார்
பெங்களூர் : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், டிகே சிவகுமார் இன்று தனது ஆன்மீக குருவைச் சந்தித்தார். எல்லா சூழ்நிலையிலும் தனக்கு வழிகாட்டியாக திகழ்வது சுவாமிஜி தான் என டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதில் பெரும் பங்கு டிகே சிவகுமாருக்கு உண்டு. வேட்பாளர் தேர்வு, வியூகங்கள், நிதி ஆதாரம் என பல வகைகளிலும் அவரது கை இருந்தது. அதோடு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றியையும் பெற்றார் டிகே சிவகுமார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களின் டெபாசிட்டையும் காலி செய்தார் டிகே சிவகுமார்.

கனகபுராவில் போட்டியிட்ட கர்நாடகா மாநில தலைவர் காங்கிரஸ் டி.கே.சிவகுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் அசோகா படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்தார். வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு ஒரே முறை மட்டுமே தொகுதிக்கு சென்ற டி.கே.சிவகுமார் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார்.
காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிகே சிவகுமார், "பாஜக என்னை சிறையில் வைத்தபோது, சோனியா காந்தி என்னைச் சந்தித்து ஆறுதல் கூறியதை என்னால் மறக்க முடியாது. காந்தி குடும்பம், காங்கிரஸ் மற்றும் நாட்டு மக்கள் என் மீது காட்டிய அன்பு தான் எனக்கு நம்பிக்கையை அளித்தது" எனக் கூறியபோதே உடைந்து அழுதார்.
இந்நிலையில், தற்போது கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் பரபரப்பாக இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவகுமார் ஆகியோர் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர்.
கோடீஸ்வரரான டி.கே.சிவகுமார், வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே தனது சொத்து மதிப்பு ரூ.1,414 கோடி என பகிரங்கமாக அறிவித்தார். ஒருபக்கம் முதல்வர் ரேஸ் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இன்று டிகே சிவகுமார் தனது ஆன்மீக குருவான வ்ருக்ஷப தேசிகேந்திர சீரை சந்தித்தார்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தனது ஆன்மீக குருவை சந்திப்பதற்காக நோனாவினகெரே சென்றார். தனது வெற்றிக்குப் பிறகு டி.கே.சிவகுமார் தனது குடும்பத்தினருடன் நோனாவினகெரே மடத்திற்குச் சென்று விருஷப தேசிகேந்திர சீரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிவகுமார் "எனது ஆன்மீக குருவை அஜ்ஜய்யா மடத்தில் சந்திக்க நோனாவினகெரே வந்துள்ளேன். கடந்த சில நாட்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். சுவாமிஜியின் ஆசிர்வாதத்தைப் பெறவே நான் இங்கு வந்துள்ளேன்.
இந்த மடம் எனக்கு புனிதமான இடம். சுவாமிஜி எப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். வருமான வரித்துறை சோதனை நடந்தபோதும் சுவாமிஜி எனக்கு முழு வழிகாட்டுதலை அளித்தார். நான் 134 சீட் கேட்டேன் அதை விட அதிகமாக பெற்றேன்." என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications