Exclusive: பெங்களூரில் சிகிச்சை பெறும் ஓமிக்ரான் பாதித்த நோயாளிகள் உடல்நிலை எப்படி உள்ளது தெரியுமா?
பெங்களூர்: கொரோனாவின் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூரில் உள்ள பவுரிங், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
கொரோனா வைரசின் புதிய உருமாறிய வகையான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், சில பகுதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் உலக சுகாதார அமைப்பு நான்கு நாட்களுக்கு முன்பாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதற்கு முன்பாகவே பெங்களூரை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த யாரையும் அவர் சந்திக்கவும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் இவருக்கு புதிய வகை வைரஸ் எப்படி பரவியது என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சந்தேகம் வந்தது எப்படி?
இந்தியாவில் ஏற்கனவே ஓமிக்ரான் வைரஸ் பரவல் தாக்கம் இருந்திருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் கோடிட்டுக் காட்டுகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளன. விஷயம் இதுதான்.. அந்த அரசு டாக்டருக்கு வயது 46. நவம்பர் 21ம் தேதி, அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே நாள் மாலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில், உறுதி செய்யப்பட்டது. ஆனால் வழக்கத்தை விட மிக அதிகமாக வைரஸ் லோடு அவருக்கு இருந்துள்ளது. அதாவது சிடி வேல்யூ 13 என்ற அளவுக்கு இருந்துள்ளது.

வீட்டு தனிமை
இதனால் சந்தேகமடைந்த நிபுணர்கள், இந்த வைரசை மரபணு சோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் ஓமைக்ரான் எனப்படும் புதிய வைரஸ் இவரை தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த மருத்துவர் முதலில் இருநாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்தார். பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நவம்பர் 25ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவருடன் 13 பேர் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர். அதில் 38 வயதாகும் அவரது மனைவி ஒருவர். 205 பேர் இரண்டாம் வகை தொடர்பில் இருந்துள்ளனர். இதில் முதன்மை தொடர்புகளிலிருந்த 3 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டாவது வகை தொடர்பை சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பிறருக்கு நோய் பரவவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். பாதிக்கப்பட்ட அனைவருமே தற்போது பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிகிச்சை பெறுவோர் உடல்நிலை
சிகிச்சை பெறுவோரின், உடல்நிலை சீராக இருந்து வருகிறது. சாதாரண வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐசியூ, சிகிச்சை அவர்களுக்கு தேவைப்படவில்லை. அதேபோன்று, ரத்தத்தில், ஆக்சிஜன் அளவு சரியாக இருப்பதால் ஆக்சிஜன் அளிக்கவேண்டிய உதவியும் அவர்களுக்கு தேவைப்படவில்லை. இந்த ஆண்டு கோடை காலத்தில், இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவியபோது, நிறைய பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அது கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் என்னதான் வேகமாக பரவும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்று தென் ஆப்பிரிக்காவிலிருந்து மருத்துவர் ஒருவர் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும் சாதாரண அறிகுறிகளுடன்தான் காணப்படுகிறார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறைந்த அபாயம்
ஒருவேளை, இது இப்படியே நீடித்தால் டெல்டாவை விட குறைந்த அபாயம் கொண்ட இந்த வைரசாக, உலகில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக மாறும். அப்போது டெல்டா பரவல் வெகு விரைவாக குறைந்து விடும். அது மனித குலத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் புதிய வகை வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தினாலோ, மிக அதிகமாக பரவி மருத்துவமனைகளை நோக்கி மக்களை ஓட செய்தாலோ, மருத்துவ நிர்வாக அமைப்பு, சீர்குலையும். இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த இரண்டில் முதலாவது சினாரியோ நடக்கும் என்பதற்கான நம்பிக்கை ஒளியை பெங்களூரில் சிகிச்சை பெறும் ஐந்து பேரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரம் டெல்டா வகை வைரசை விட, இது ஐந்து மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாழ வேண்டியது அவசியம் என்று உலகம் முழுக்க உள்ள சுகாதார நிபுணர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications