டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடையாது.. சித்தராமையா திடீர் அறிவிப்பு! காங்கிரஸில் தீராத குழப்பம்
பெங்களூர்: ‛‛கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை. 5 ஆண்டு பதவிக்காலத்தையும் முதல்வராக நான் நிறைவு செய்வேன். டிகே சிவக்குமாருக்கு சில எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை'' என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பதவியை காங்கிரஸ் தலைவராக இருக்கும் டிகே சிவக்குமார் விரும்புகிறார். தற்போது இரண்டாண்டு பதவிக்காலத்தை சித்தராமையா முடித்துள்ள நிலையில் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் 5 ஆண்டு பதவியையும் நிறைவு செய்வேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. டிகே சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார்.

இதற்கிடையே தான் முதல் இரண்டரை ஆண்டு மட்டுமே சித்தராமையா முதல்வராக இருப்பார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராக இருப்பார் என்று ஒரு தகவல் தொடர்ந்து பரவி வருகிறது. தற்போது சித்தராமையா கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். இதனால் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இது கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தாலும் கூட இன்னும் முதல்வர் பதவி தொடர்பான விவாதம் மட்டும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான் ஆங்கில ஊடகத்துக்கு முதல்வர் சித்தராமையா பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
5 ஆண்டுகளும் நான் தான் முதல்வராக தொடர்வேன். இதனை நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன். கடந்த 2ம் தேதி இதுபற்றி விளக்கம் அளித்தேன். அப்போது டிகே சிவக்குமாரும் உடன் இருந்தார். முதல்வர் பதவியை விட்டு பாதியில் வெளியேறுவது என்பது வெறும் வதந்தி. டிகே சிவக்குமார் முதல்வருக்கான ரேஸில் இருக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதனை டிகே சிவக்குமாரே சொல்லி உள்ளார். ஆனால் இப்போது முதல்வர் பதவி காலியாக இல்லை.
டிகே சிவக்குமாருக்கு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களின் ஆதரவு இல்லை. முதல்வர் பதவி இரண்டரை ஆண்டு காலம் என்று யாரும் முடிவு செய்யவில்லை. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதனை நாங்கள் கேட்போம். அதனை ஃபாலோ செய்வோம். மல்லிகார்ஜூன கார்கே ஏற்கனவே சொல்லிவிட்டார். எங்களின் கட்சி மேலிடம் சார்ந்த கட்சியாகும். மேலிடம் என்ன சொல்கிறதோஅதனை நானும், டிகே சிவக்குமாரும் கேட்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications