கொடூர கொடுமை.. குழந்தையின் அந்தரங்க உறுப்பில் தீவைத்த அங்கன்வாடி ஆசிரியை.. கர்நாடகத்தில் அதிர்ச்சி
பெங்களூர்: கர்நாடகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 3 வயது நிரம்பிய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் தீக்குச்சியால் சூடுவைத்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி அருகே கோடிகெரே கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் சென்று வருகின்றனர்.
அங்கன்வாடி உதவியாளராகவும், ஆசிரியையாகவும் ரஷ்மி என்பவர் உள்ளார். இவர் குழந்தைகளை துன்புறுத்துவதாக அடிக்கடி புகார்கள் எழுந்தன.

சிறுநீர் கழித்த ஆண் குழந்தை
இந்நிலையில் அங்கன்வாடி மையத்துக்கு 3 வயது நிரம்பிய ஆண் குழந்தையும் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த ஆண் குழந்தை அடிக்கடி தான் அணிந்திருந்த ஆடையிலேயே சிறுநீர் கழித்து வந்துள்ளான். இதனை ஆசிரியை ரஷ்மி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அங்கன்வாடி சென்ற சிறுவன் தான் அணிந்திருந்த ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான்.

சூடுவைத்த ஆசிரியை
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆசிரியை ரஷ்மி, சிறுவனின் அந்தரங்க உறுப்பில் தீவைத்து சுட்டுள்ளார். அதாவது தீக்குச்சியால் அவர் சூடு வைத்துள்ளார். இதனால் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது துடித்துள்ளான். இதையடுத்து ஆண் குழந்தையை அவனது பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீஸ்
மருத்துவமனையில் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மருத்துவுமனையில் இருந்து குழந்தை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான். இதற்கிடையே சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆசிரியை ரஷ்மி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்பி கூறுவது என்ன?
இதுபற்றி தும்கூர் மாவட்ட எஸ்பி ராகுல் குமார் சாகாபூர்வாட் கூறுகையில், ‛‛அங்கன்வாடி சென்ற சிறுவன் அடிக்கடி ஆடையில் சிறுநீர் கழித்தார். இதனால் கோபமடைந்த ஆசிரியை குழந்தையின் அந்தரங்க உறுப்பில் சூடுவைத்துள்ளார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார். மேலும் இந்த சம்பவம் குறித்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணையை துவங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
