கர்நாடகா தேர்தல்: வேட்பாளர் பட்டியலில் முந்தும் காங்கிரஸ்.. பாஜகவை வீழ்த்த பக்கா பிளான்..முழுபின்னணி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து தோல்வியின் பிடியில் சிக்கிய காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றி உத்வேகம் கொடுத்துள்ளது. அங்கு பாஜகவை ஆட்சி கட்டிலில் அகற்றி காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்தது. அதேபோணியில் கர்நாடகாவிலும் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இந்நிலையில் தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் முக்கிய பிளானுடன் பாஜகவை முந்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக பசவராஜ் பொம்மை உள்ளார். இங்கு மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு ஆட்சியமைக்க தேவையான 113 தொகுதிகள் கிடைக்கவில்லை. இருப்பினும் 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவானது.
இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் 6 நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி முதல்வரானார். இவர் ஓராண்டாக முதல்வராக இருந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல்
இதையடுத்து அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்த நிலையில் மீண்டும் முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி கலைந்தது. இதையடுத்து புதிய ஆட்சியை பாஜக அமைத்தது. முதல்வராக எடியூரப்பா செயல்பட்டார். 2 ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் ராஜினாமா செய்த நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். தற்போதைய சூழலில் கர்நாடகாவில் பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 72 பேரும் ஜனதாதளம் கட்சிக்கு 30 பேரும் உள்ள நிலையில் 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

களைகட்டிய தேர்தல் களம்
இந்த தேர்தலுக்கான பணியை ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் பணியை துவங்கி உள்ளன. மூன்று கட்சிகளின் தலைவர்களும் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் அதிகபட்சமாக 4 மாதங்கள் உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளும் பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் பெற்று வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ், வேட்பாளர் தேர்விலும் தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
அந்த வகையில் தான் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள சித்தராமையா உறுதி செய்துள்ளார். இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‛‛கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்த மாதம் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இந்த முறை நிச்சயம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கும்'' என்றார்.

224 தொகுதிக்கு 1,350 பேர் விண்ணப்பம்
காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் செய்ய கோரப்பட்டது. அதன்படி மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன நிலையில் 1,350 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்களின் திறமை, வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஜனவரி மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

திட்டம் என்ன?
தேர்தலுக்கு 3 முதல் 4 மாதங்கள் இருக்கும்போதே முன்கூட்டியே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதன் மூலம் அந்த வேட்பாளர் தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்ற முடியும். மேலும் ஏதேனும் பிரமுகர்கள் அதிருப்தி அடைந்தால் அவர்களை சமாதானம் செய்யவும், ஒருவேளை மாற்று கட்சியில் இணைந்தாலும் அதற்கேற்ப வியூகங்களை வகுக்கவும் காலஅவகாசம் இருக்கும் என கட்சியினர் நம்புகின்றனர். மேலும் விரிவான திட்டமிடலுடன் ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் கட்சிக்கு வலுசேர்க்க முடியும் என அக்கட்சி நம்புகிறது.

முந்திய ஜனதாதளம் (எஸ்)
முன்னதாக ஜனதா தளம் (எஸ்) கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கடந்த மாதமே வெளியிட்டது. 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்ராமநகர் மாவட்டம் சென்னபட்டணாவில் குமாரசாமியும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications