கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் மாற்றம்? ஓரம்கட்டப்படும் பசவராஜ் பொம்மை? என்ன காரணம்.. பரபர தகவல்
பெங்களூரு: கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதல்வராகப் பதவியேற்று வெறும் சில மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில், அவரும் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், பசவராஜ் பொம்மையின் இன்றைய பேச்சு பல யூகங்களை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், மற்ற பாஜக ஆளும் மாநிலங்களைப் போல இல்லாமல் கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்து 2023ஆம் ஆண்டில் தான் சட்டசபைத் தேர்தல். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் உள்ள போதிலும், அங்குத் தெளிவற்ற சூழல் நிலவி வருகிறது.

கர்நாடகாவில் என்ன நடந்தது
கடந்த 2018இல் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 224 இடங்களில் 104இல் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு இறுதியில் 80 இடங்களில் வென்ற காங்கிரசும் 40 இடங்களில் 37 இடங்களில் வென்ற ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது. இருப்பினும், இந்த கூட்டணி ஆட்சி வெறும் சில மாதங்கள் மட்டுமே நீட்டித்தது.

எடியூரப்பா வெளியே பசவராஜ் பொம்மை உள்ளே
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய, கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து 2019 ஜூலை மாதம் கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது. எடியூரப்பா முதல்வரானார். இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கம் முதலே அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகலாம் என்று தகவல் பரவின. அதன்படி கடந்த ஜூலை மாதம் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எடியூரப்பா கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராகப் பதவியேற்றார்.

மீண்டும் முதல்வர் மாற்றம்?
பசவராஜ் பொம்மை முதல்வராகி சில மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில், அவரும் பதவி விலகக் கூடும் என்று செய்திகள் பரவ தொடங்கியுள்ளன. இது அம்மாநில பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய ராணி சென்னம்மாவின் சிலையை முதல்வர் பசவராஜ் பொம்பை இன்று கித்தூரில் இன்று திறந்து வைத்தார். தனது சொந்த தொகுதியான ஷிகாவ்னின் பொதுமக்களிடம் உணர்ச்சிகரமாகப் பேசிய அவர், எந்த ஒரு பதவியும் நிரந்தரமானது இல்லை என்று கூறியுள்ள பரவும் யூகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.

எதுவும் நிரந்தரம் இல்லை
அந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இந்த வாழ்க்கையே நிரந்தரம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு காலம் இங்கு இருப்போம் என்று தெரியவில்லை. இங்கு எந்த பதவிகளும் நிரந்தரமல்ல. இந்த உண்மையை நான் ஒவ்வொரு கணமும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன்.

பெயரே நிரந்தரம், பதவிகள் அல்ல
இது (ஷிகாவ்ன்) என்னுடைய தொகுதி. கடந்த காலங்களில் ஷிகாவ்னுக்கு வெளியே நான் உள்துறை அமைச்சராகவும், நீர்ப்பாசன அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் ஷிகாவ்ன் தொகுதி மக்களுக்கு நான் எப்போதுமே வெறும் பசவராஜ் பொம்பை மட்டுமே. இதையே தான் நான் எப்போதும் கூறி வருகிறேன். கர்நாடகாவின் இதர பகுதி மக்களுக்கு நான் இன்று முதல்வராக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு நான் எப்போதும் அதே பசவராஜ் பொம்மையாகவே இருப்பேன். ஏனெனில் பசவராஜ் என்ற பெயரே இங்கு நிரந்தரம், பதவிகள் அல்ல.

கண்ணீர் விட்ட முதல்வர்
உங்களிடம் சொல்ல எனக்குப் பெரிதாக எதுவும் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடிந்தால், அதுவே எனக்குப் போதும். உங்கள் அன்பையும் நம்பிக்கையையும் விடப் பெரிய சக்தி எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன். மனசாட்சியை எப்போதும் விழிப்புடன் வைத்துக் கொண்டே அனைத்து செயல்களையும் செய்ய நான் முயல்கிறேன். உங்களுடன் பேசும் போது உணர்ச்சிவசப்படாமல் இருக்க முயல்கிறேன். ஆனால் முடியவில்லை" என்று கூறியவாறே அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டார்.

என்ன காரணம்
பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த பேச்சு மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பாஜக தலைமை எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது என்று உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், 61 வயதாகும் பசவராஜ் பொம்மை தொடர்ந்து பல மாதங்களாக முழங்கால் பிரச்சனையால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அடுத்த தேர்தலுக்கு முன்பு, இளம் தலைவரை வளர்த்தெடுக்க பாஜக தலைமை இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
