கர்நாடகாவின் 865 கிராமங்கள் எங்களுக்கே சொந்தம்-மகாராஷ்டிரா சட்டசபை தீர்மானம்- கன்னடர்கள் கொந்தளிப்பு
பெங்களூர்: கர்நாடகாவின் 865 கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைப்போம் என மகாராஷ்டிரா சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது எல்லை பிரச்சனையில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. கர்நாடகா எல்லையில் மராத்தி மொழி பேசுகிற பகுதிகளை மகாராஷ்டிரா தமது மாநிலத்துடன் இணைக்க முயற்சிக்கிறது. இதற்கு எதிராக கர்நாடகா அரசு தீவிரமாக இருப்பதால் இரு மாநில எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் நிலவுகிறது.
கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் பெலகாவி, கார்வார் பால்கி, பிதார் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க கோரும் போராட்டங்கள் நீண்டகாலமாக நடைபெறுகின்றன. இதனை கர்நாடகா திட்டவட்டமாக ஏற்க மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக இந்த எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது; மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும் எல்லை பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் உக்கிரமாக இருக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரு மாநில முதல்வர்களுடன் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சில நாட்கள் எல்லையில் அமைதி நிலவியது. மகாராஷ்டிராவின் சஞ்சய் ராவத் போன்ற தலைவர்கள் கர்நாடகாவை சீண்டும் வகையில் தொடர்ந்து பேசி வந்தனர். அருணாச்சல பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவிய பாணியில், கர்நாடகாவுக்குள் நாங்களும் நுழைவோம் என்றெல்லாம் சஞ்சய் ராவத் அதிரடி காட்டி பேசினார். இதனால் கர்நாடகாவில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்தான் கர்நாடகா சட்டசபையில் கடந்த வாரம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், எல்லை விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்துடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகாவின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட மகாராஷ்டிராவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. இது கன்னடர்களின் உரிமை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலடியாக மகாராஷ்டிரா சட்டசபையில் தற்போது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் 865 கிராமங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும். கர்நாடகாவின் மராத்தி மொழி பேசும் பகுதி மக்களுக்காக மாநில அரசு துணையாக நிற்கும். கர்நாடகாவில் உள்ள மராத்தி மொழி பேசும் 865 கிராமங்களையும் மகாராஷ்டிராவுடன் இணைப்பதற்காக சட்டப்பூர்வமாக மகாராஷ்டிரா அரசு வழக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளின் சட்டசபை தீர்மானங்களால் எல்லை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசின் இந்த தீர்மானம் நாட்டின் கூட்டாட்சிக்கு முறைக்கு எதிரானது என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கொந்தளித்துள்ளார். இதேபோல் கர்நாடகா அரசியல் தலைவர்கள் மகாராஷ்டிராவின் இந்தத் தீர்மானத்தை வன்மையாக கண்டித்துள்ளனர். ஏற்கனவே பெலகாவி உள்ளிட்ட கர்நாடகாவில் உள்ள மராத்தி பகுதிகளை இணைத்து தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இப்போது மகாராஷ்டிரா அரசும் 865 கர்நாடகா கிராமங்களை கபளீகரம் செய்ய களமிறங்கி இருப்பது இரு மாநில எல்லையில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications