ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு.. மங்களூர் குண்டுவெடிப்பில் கைதான ஷாரீக் யார்? தமிழகத்துடன் என்ன சம்பந்தம்?
பெங்களூர்: மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த நிலையில் அதுபற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில் கைதான முகமது ஷாரீக் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், சொந்தமாக குண்டு தயாரித்து 2 இடங்களில் சோதனை செய்த நிலையில் தற்போது ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கும் தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19ம் தேதி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஆட்டோ வெடித்து தீப்பிடித்தது.
விசாரணையில் இது சக்தி குறைந்த குக்கர் வெடிகுண்டு என்பது தெரியவந்தது. மேலும் இது பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டம் என கர்நாடக போலீசார் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஷாரிக் என்பவரை போலீசார் கைது யெ்துனர். குண்டுவெடிப்பில் அவர் காயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் குக்கர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது பற்றியும், கைதான நபர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முகமது ஷாரீக்
இதற்கிடையே தான் சம்பவ இடத்தில் ஆதார் அட்டை கிடைத்தது. அது தார்வார் மாவட்டம் உப்பள்ளி பிரேம்ராஜ் என கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தினோம். அப்போது பிரேம்ராஜின் ஆதார் அட்டை தொலைந்து போன நிலையில் அது தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவரது பெயர் முகமது ஷாரீக் என்பதும், அவர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அரக சுப்புகுட்டே கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பிகாம் படித்துள்ளார். இவரது தந்தை ஜவுளி கடை நடத்தி வந்த நிலையில் முகமது ஷாரீக் அங்கு பணியாற்றி வந்துள்ளார். தாய் சிறுவயதில் இறந்ததால் முகமது ஷாரீக் தந்தையின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார்.

3 வழக்குகள்
24 வயது நிரம்பிய முகமது ஷாரீக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருப்பதும், அதில் முக்கிய குற்றவாளியாக இவர் இருப்பதும் தெரியவந்தது. அவர் மீது மங்களூரு ஷிவமொக்கா புறநகர் காவல் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தீவிரவாதத்தை தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சிவமொக்கா புறநகர் போலீசில் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக அவர் மீது 2022 செப்டம்பர் 9 ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரசாயன பொருட்கள் பறிமுதல்
இந்நிலையில் தான் சிவமொக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முகமது ஷாரீக் மைசூர் சென்று வாடகை வீட்டில் தங்கினார். அங்கிருந்தபடியே நவம்பர் 19ம் தேதி மங்களூர் வந்து குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். மைசூருவில் உள்ள வாடகை வீட்டில் சல்பர் பவுடர், நட்ஸ், போல்ட், சர்க்யூட்கள், மல்டி பங்ஷன் டிலே டைமர்கள், கிரைண்டர், தீப்பெட்டி, பேட்டரி, மெக்கானிக்கல் டைமர்கள், ஆதார் கார்டுகள், சிம் கார்டுகள், மொபைல் டிஸ்ப்ளே போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குண்டுகள் தயாரித்து 2 முறை சோதனை
முன்னதாக சிவமொக்காவை மையமாக வைத்து முகமது ஷாரீக் சதிசெயல்களில் ஈடுபட்டுள்ளார். மங்களூரை சேர்ந்த முகமது மாஸ், சிவமொக்காக சித்தேஷ்வர் நகரை சேர்ந்த சையத் யாசின் ஆகியோருடன் சேர்ந்து சிவமொக்காவில் ரகசிய இடத்தில் வெடிகுண்டு தயாரித்துள்ளார். அதன்பிறகு குருபுரா துங்கா ஆற்றில் வெடிகுண்டு வீசி சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் தட்சிண கன்னடா மாவட்டம் பந்த்வாலா அருகே நேத்ராவதி ஆற்றங்கரையில் வெடிகுண்டு வெடிக்க செய்து பயிற்சி எடுத்துள்ள விஷயங்கள் வெளியாகி உள்ளன.

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு
மேலும் இவர் முகமது ஷாரீக் ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் குழுவில் ஒன்றான அல்ஹிந்த் உட்பட பல அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்துள்ளது. அல்ஹிந்த் அமைப்புக்கான ஆட்சேர்ப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முசாவிர் ஹுசைனுடன் தொடர்பில் இருந்த தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த அராபத் அலி மற்றும் அப்துல் மத்தின் தாஹா உள்ளிட்டவர்களுடன் முகமது ஷாரீக் சேர்ந்து செயல்பட்டுள்ளதும், பக்கா பிளானோடு மங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் டார்க் வெப் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications