ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. துப்பு கொடுத்தால் ரூ 10 லட்சம் சன்மானம்.. என்ஐஏ அதிரடி அறிவிப்பு
பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இந்த சம்பவத்தில் உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். விசாரணையில் உணவகத்திற்கு வந்த நபர் ரவா இட்லியை சாப்பிட்டுவிட்டு ஒரு பையை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றார். சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு நபர் மாஸ்க் அணிந்து கொண்டு மப்ளர் போட்டபடியே பில்லிங் கவுன்ட்டரில் இருந்தார்.
அவர் ரவா இட்லியை ஆர்டர் செய்தார். ஆர்டரை கொடுத்துவிட்டு ஒரு கார்னரில் அமர்ந்திருந்தார். ரவா இட்லியும் வந்தது. அதை முழுவதுமாக சாப்பிட்டார். சுமார் 11.44 மணிக்கு வெடிகுண்டு இருக்கும் பையை உணவகத்தில் வைத்துவிட்டு வெளியேறுகிறார்.

ஒரு மணி நேரம் கழித்து வெடித்த குண்டு: மதியம் 12.55 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் கழித்துதான் குண்டு வெடித்தது. இந்த நிலையில் அந்த நபரை பிடிக்க அவருடைய படத்தை வரைய செயற்கை நுண்ணறிவு உதவியை போலீஸார் நாடியுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கஃபேயில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேரில் போய் விசாரணை நடத்தினர். இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில் வெடிகுண்டு வைத்தவரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவரை பற்றி துப்புக் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பு கொடுப்போரின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications