கிறிஸ்துமஸ் நாளில் கடும் போக்குவரத்து நெரிசல்.. பெங்களூரில் நள்ளிரவில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரம் வாகனங்கள் சாலையிலேயே அணிவகுத்து நின்றது.
கிறிஸ்தவர்கள் இறைத் தூதராக நம்பப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிச. 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்றிரவு முதலே தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ்: போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என்று மக்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதற்கிடையே பெங்களூரில் நேற்றிரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் முக்கிய சாலைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் தினத்தன்று பீனிக்ஸ் மால் ஆஃப் ஏசியாவிற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் பெல்லாரி சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்: அப்போது சாலைகளில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சுமார் 3 மணி நேரம் அங்கேயே நிற்கும் சுழலே இருந்தது. மேலும், விமான நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களும் பல மணிநேரம் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
நூற்றுக்கணக்கான நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பல பேருந்துகளும் டிராபிக் நெரிசலில் சிக்கியது.
100 அடி தூர மரம்: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசியாவின் பீனிக்ஸ் மால் அருகே 100 அடி உயரத்தில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் ஒன்று நடப்பட்டது. இது அங்கே மக்களை மிகப் பெரியளவுக்கு ஈர்ப்பதாக அமைந்தது. ஏற்கனவே கிறிஸ்மஸ் மற்றும் வார இறுதி நாட்களில் இந்த மால் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணி முதல் பீனிக்ஸ் மால் ஆஃப் ஏசியாவை நோக்கி வாகனங்கள் அணி வகுத்ததால் அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து பெங்களூர் போலீசார், "மால் ஆஃப் ஏசியாவுக்கு ஏராளமான மக்கள் வருவதால், மாலுக்குச் செல்லும் பெல்லாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பார்க்கிங் நிரம்பியுள்ளது. பயணிகள் அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications