ரோடு வசதி கேட்ட வாலிபரின் கன்னத்தில் ‛பளார்’! கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கோபம்.. பரபர சம்பவம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் ரோடு வசதி சரியில்லை. அதை சரிசெய்வதோடு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்ட வாலிபரின் கன்னத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கடரமணப்பா ‛பளார்' என அடித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வெங்கடரமணப்பா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இவர் நேற்று பாவகடா தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏ
இந்த கூட்டத்தை முடித்து கொண்டு வெங்கடரமணப்பா வெளியே வந்தார். அலுவலகத்துக்கு வெளியே காரை நோக்கி அவர் நடந்து சென்றார். அப்போது அவர் அருகே இளைஞர் ஒருவர் ஓடி வந்தார். எம்எல்ஏ வெங்கடரமணப்பாவை பார்த்து, ‛‛நாகேனஹள்ளி கிராமத்துக்கு ரோடு சரியில்லை. இந்த ரோட்டை சரிசெய்ய வேண்டும். மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என கூறினார்.

கன்னத்தில் பளார்
இதனால் கோபமடைந்த வெங்கடரமணப்பா, இளைஞரின் கன்னத்தில் ‛பளார்' என அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத இளைஞர் அதிர்ந்து போனார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக விமர்சனம்
இதை கர்நாடக பாஜக கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‛‛அட்டூழியம் செய்யும் கட்சி என்பதன் மறுபெயர் காங்கிரஸ். கர்நாடகாவில் உள்ள ஒரு இளைஞர் தனது கிராமத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தொகுதி எம்எல்ஏவிடம் கேட்க முயன்றார். பிரச்சனையை கேட்க மறந்த காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கடரமணப்பா அந்த இளைஞரை அறைந்தார்" என கூறியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளது.

எம்எல்ஏ விளக்கம்
இதுகுறித்து வெங்கடரமணப்பாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ‛‛இளைஞர் தனது கிராமத்துக்கு ரோடு வசதி கேட்கும்போது மோசமான சொல்லை பயன்படுத்தினார். இதனால் தான் கோபமடைந்தேன். இதேபோன்று தான் அவர் பேசுவார் என்பதை பொதுமக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ரோடு பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து அடுத்தவாரம் பணிகள் துவங்க உள்ளது'' என கூறினார்.












Click it and Unblock the Notifications