ஹிஜாப், ஹலால், ஒலி பெருக்கி பழசு.. கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு எதிரான புது பிரசாரம் என்ன தெரியுமா?
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய பழ வியாபாரிகள் எச்சில் துப்பி விற்பதால் இந்துக்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு மோகெர் தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடுத்தடுத்த பிரச்சனைகளை இந்துத்துவ அமைப்புகள் கையில் எடுத்து உள்ளனர்.
கோயில் திருவிழாவில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை நடத்தக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய கறிக்கடைகளில் ஹலால் கறிகளை இந்துக்கள் வாங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங்க்தள் அமைப்பினர், சில கடைகள் மீது தாக்குதலும் நடத்தினர்.

மதப் பிரச்சனைகளால் அமைதியிழந்த கர்நாடகா
இதன் தொடர்ச்சியாக மசூதிகளில் தொழுகைக்கு அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்துத்துவ அமைப்புகள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றன. இந்த விவகாரங்கள் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும் மத பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இஸ்லாமிய பழ வியபாரிகளுக்கு குறி
இந்த சூழலில்தான் புதிய பிரச்சனையை கையில் எடுத்து இருக்கிறது இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு. கர்நாடகா பழ வியாபாரத்தில் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்களிடம் இந்துக்கள் யாரும் பழங்களை வாங்கக்கூடாது எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு காரணமாக அந்த அமைப்பு சொல்லி இருப்பதுதான் தற்போது பலரது புருவத்தை உயர்த்த வைத்து இருக்கிறது.

எச்சில் ஜிஹாத்
அதாவது இஸ்லாமிய வியாபாரிகள் பழங்களிலும், பிரட்டுகளிலும் எச்சில் துப்பி விற்று "எச்சில் ஜிஹாத்" செய்து வருகின்றனர் என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு மோகெர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "கர்நாடக பழ வியாபாரத்தில் இஸ்லாமியர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. அவர்கள் பழங்களிலும் பிரட்களிலும் எச்சில் துப்பி விற்பனை செய்து வருவதை நாம் பார்த்தோம். இந்த இஸ்லாமியர்கள் செய்து வரும் தொழில் என்பது 'எச்சில் ஜிஹாத்' தான்." என்றார்.

பிரச்சாரம் செய்ய வேண்டும்
அதேபோல் வலதுசாரி தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் சம்பர்கியும், இஸ்லாமியர் பழ வியாபாரிகளை புறக்கணிக்க வலியுறுத்தி இருக்கிறார். அவர் தனது பதிவில், "இந்து விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைக்கின்றார். ஆனால், இடையில் வரும் இஸ்லாமியர்கள் அதன் முழு பலன்களை அனுபவிக்கிறார்கள். இதனை ஒழிக்க நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications