மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் – தர்மேந்திரபிரதான்

By: V SUBRAMANIAN
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நுகர்வோர் சுமையை குறைக்கும் விதமாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தாலும், பெரும்பாலான மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க மறுப்பதால் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு நடுத்தர வயது வாலிபர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பங்க்குக்கு செல்கிறார். பெட்ரோல் பங்க்கில் உள்ள ஊழியரிடம் 2000 ரூபாய் கொடுத்துவிட்டு, தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சொல்கிறார். உடனே, பெட்ரோல் பங்க ஊழியர் பேனாவிற்கு மை ஊற்றப்பயன்படுத்தும் இங்க் ஃபில்லரை கொண்டு இரு சக்கர வாகனத்திற்கு சில துளிகள் பெட்ரோல் விடுகிறார். உடனே வாலிபர், ஏம்ப்பா 2000 ரூபாய் கொடுத்திருக்கேன், இன்னும் இரண்டு சொட்டு ஊத்துங்க என்று கெஞ்சுகிறார். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர், நீ கொடுத்த 2000 ஓவாய்க்கு இவ்வளவு தான் ஊத்த முடியும், என்று சொல்கிறார். உடனே அதிர்ச்சியில் வாலிபர் 'ஓ’ வென அலறிக்கொண்டு கீழே விழுகிறார். சுதாரித்து எழுந்தவர், ச்சே இது கனவா! 'அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

இது தற்போது சமூக வலைதளங்களில் உலா வரும் ட்ரென்டிங் காமெடி வீடியோதான். ஆனால், இப்பொழுது பெட்ரோல், டீசல் விற்கும் விலையைப் பார்த்தால், இது கூடிய விரைவில் உண்மையாக ஆனாலும் ஆகலாம். தலைநகர் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 73.36 ரூபாய்க்கும் டீசல் 64.20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது கடந்த நான்கு ஆண்டுகளின் மிக உச்சபட்ச விலையாகும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளதாலும், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்ததாலும், விலை அதிகரித்தவண்ணம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் குறைத்தது.

Petrol, Diesel price fly high-States refuse to cut Taxes

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததுடன், இவ்விரண்டின் மீதான வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்றும், அது நுகர்வோரின் சுமையை கணிசமாக குறைக்கும் என்றும் அறிவுறுத்தியது.

மத்திய அரசின் ஆலோசனையை பி.ஜே.பி கட்சி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களும் உடனடியாக வாட் வரியை குறைத்துவிட்டன. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா. கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் பெரும்பாலான மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மறுத்துவிட்டன. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் மாநிலங்களுக்கு வரும் வரி வருவாய் குறைவதுடன், கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் மறுத்துவிட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதே சமயம், வாட் வரியை குறைக்கும்படி அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டது. மத்திய அரசின் அறிவுரையை சில மாநிலங்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டு வாட் வரியை குறைத்துவிட்டன. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் தங்களின் வரி வருவாய் பாதிக்கும் என்று மத்திய அரசின் யோசனையை உடனடியாக நிராகரித்துவிட்டன. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் மட்டுமே நுகர்வோரின் சுமை குறையும் என்றும் மாநில அரசுகள் இது குறித்து கருணையுடன் சிந்திக்க வேண்டும், என்று கவலை தெரிவித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டுவரத் தயார் என்று சொன்னார். ஆனால், நம் தமிழ்நாட்டின் மின் துறை அமைச்சர், பெட்ரோல். டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படுமானால். மாநிலங்களுக்கு சுமார் 14000 கோடி ரூபாய் அளவிற்கு வரி இழப்பு ஏற்படும், என்று மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol and Diesel prices soars 4 years high. The Central government also given suggestion to all states to reduce the VAT on petrol, diesel prices. It will give more relief to the consumers-said Petroleum Minister Dharmendra Pradhan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற